ஐ.எஸ்.எல் கால்பந்து, கோவாவிடம் சென்னை தோல்வி 1

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியை சென்னையின் எப்.சி. அணி ஏமாற்றத்துடன் தொடங்கி இருக்கிறது. தனது முதல் ஆட்டத்தில் 2-3 என்ற கோல் கணக்கில் கோவாவிடம் தோல்வியை தழுவியது.

4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் அட்லெடிகோ டி கொல்கத்தா, சென்னையின் எப்.சி., டெல்லி டைனமோஸ், கேரளா பிளாஸ்டர்ஸ், மும்பை சிட்டி எப்.சி., புனே சிட்டி எப்.சி., நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) எப்.சி., கோவா எப்.சி., பெங்களூரு எப்.சி., ஜாம்ஷெட்பூர் எப்.சி. ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில் தொடரின் 3-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, கோவா எப்.சி.யை சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று மாலை எதிர்கொண்டது. உள்ளூர் ரசிகர்களின் அமோக ஆதரவுடன் சென்னை அணி களம் இறங்கிய போதிலும் பந்து கோவா அணி வசமே அதிகமாக சுற்றிக்கொண்டிருந்தது. அலைஅலையாக படையெடுத்த கோவா அணியினர், சென்னை அணிக்குரிய கோல் பகுதியை அடிக்கடி முற்றுகையிட்டனர். 19-வது நிமிடத்தில் கோல் நோக்கி முன்னேறிய கோவா வீரர் பெர்னாண்டஸ் மயிரிழையில் பந்தை வெளியே அடித்து விட்டார்.
ஐ.எஸ்.எல் கால்பந்து, கோவாவிடம் சென்னை தோல்வி 2
25-வது நிமிடத்தில் கோவா அணிக்கு முதல் கோல் கனிந்தது. நீண்ட தூரத்தில் இருந்து கொண்டு வந்த பந்தை கோவா வீரர் பெர்னாண்டஸ் சக வீரர் பெரேன் கோரோமினாஸ் டெலசியாவிடம் தட்டிவிட்டார். அவர் அதை லாவமாக கோலாக மாற்றி அசத்தினார். சென்னை வீரர் தனசந்திர சிங் குறுக்கே பாய்ந்து விழுந்த போதிலும் தடுக்க முடியவில்லை. முதல் இரு ஆட்டங்கள் கோல் இன்றி ‘டிரா’ ஆனதால் இந்த சீசனில் கோல் போட்ட முதல் வீரர் என்ற பெருமையை பெரேன் கோரோமினாஸ் பெற்றார்.

சென்னை அணியினரின் தடுப்பாட்ட பலவீனத்தை பயன்படுத்தி 29-வது நிமிடத்தில் கோவா 2-வது கோலை திணித்தது. இரண்டு முறை சென்னை கோல் கீப்பர் கரன்ஜித்சிங்கால் தடுக்கப்பட்டு திரும்பி வந்த பந்தை கோவா வீரர் மானுல் புருனோ, அலாக்காக தூக்கியடித்து கோலுக்குள் அனுப்பினார். இந்த அதிர்ச்சியில் இருந்து சென்னை அணியினர் மீள்வதற்குள் 39-வது நிமிடத்தில் கோவா 3-வது கோலை போட்டது. இந்த கோலை மாந்தர் தேசாய் அடித்தார். இதையடுத்து முதல் பாதியில் கோவா 3-0 என்ற கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது. சென்னை வீரர்களின் தரப்பில் இலக்கை நோக்கி ஒரு ஷாட் கூட அடிக்கப்படாதது மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.ஐ.எஸ்.எல் கால்பந்து, கோவாவிடம் சென்னை தோல்வி 2

இதன் பின்னர் பிற்பாதியில் புதிய வியூகங்களுடன் சென்னை வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடினர். 46-வது நிமிடத்தில் சென்னை அணி கோல் கணக்கை தொடங்கி இருக்க வேண்டியது. கோவா கோல் கீப்பர் லட்சுமிகந்த் கட்டிமணி முன்னோக்கி வந்து விட, சென்னை மாற்று ஆட்டக்காரர் கிரிகோரி நெல்சன் பந்தை கம்பத்தில் அடித்து வீணாக்கி விட்டார்.

இப்படியே நீடித்த போராட்டத்திற்கு 70-வது நிமிடத்தில் தான் சென்னை அணிக்கு பலன் கிட்டியது. அப்போது கிடைத்த ‘பிரிகிக்’ வாய்ப்பில் சென்னை வீரர் இனிகோ கால்ட்ரோன் பந்தை பலமாக உதைத்தார். அது கோவா கோல் கீப்பர் கட்டிமணியின் கையில் பட்டு, அவரது கவனக்குறைவால் கோலாக மாறியது. இதனால் உள்ளூர் ரசிகர்கள் உற்சாகத்தில் ஆர்ப்பரிக்க அரங்கமே அதிர்ந்தது.

சென்னை அணியின் நட்சத்திர வீரர் ஜெஜெ லால்பெகுலாவுக்கு, சரியான பார்ட்னர்ஷிப் அமையாவிட்டாலும் முடிந்தவரை போராடினார். 84-வது நிமிடத்தில் கோல் பகுதியில் வைத்து அவரை எதிரணி வீரர் முதுகை பிடித்து தள்ளியதால் சென்னை அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இந்த பெனால்டி வாய்ப்பை ரபெல் அகஸ்டோ கோலாக்கினார். இதன் பின்னர் மேலும் ஒரு கோல் திணித்து ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வர சென்னை வீரர்கள் கடுமையாக முயன்ற போதிலும், எதிரணியின் பாதுகாப்பு வளையத்தை உடைக்க முடியவில்லை.

பரபரப்பான ஆட்டத்தின் முடிவில் கோவா அணி 3-2 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை தோற்கடித்து வெற்றியை பதிவு செய்தது.

இரவு 8 மணிக்கு பெங்களூருவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் அறிமுக அணியான பெங்களூரு அணி 2-0 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டியை வீழ்த்தியது. எடுவர்டோ மார்ட்டின், சுனில் சேத்ரி பெங்களூரு அணிக்காக கோல் அடித்தனர்.

போட்டியில் இன்றும், நாளையும் ஓய்வு தினமாகும். சென்னை அணி தனது அடுத்த ஆட்டத்தில் 23-ந்தேதி இதே மைதானத்தில் கவுகாத்தி அணியை சந்திக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *