இர்பான் பதானிற்கு தடை இல்லா சான்று வழங்கியது பரோடா கிரிக்கெட் வாரியம்
இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களில் ஒருவரான இர்பான் பதனானின் வேண்டுகோளை ஏற்று, பரோடா கிரிக்கெட் வாரியம் அவருக்கு தடை இல்லா சான்று வழங்கியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரரும் ஆல் ரவுண்டருமான இர்பான் பதான், கடந்த 2012ம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணியில் இடம்பெற முடியாமல் தவித்து வருகிறார்.
இது தவிர உள்ளூர் டி.20 தொடரான ஐ.பி.எல் தொடர் மற்றும் சையத் முஸ்தாக் அலி டிராபி உள்ளிட்ட தொடர்களிலும் அவர் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார்.
தொடர்ந்து சோதனைகளை சந்தித்து வரும் இர்பான் பதானிற்கு சற்று ஆறுதலாக, உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி டிராபியில் பங்கேற்கும் பரோடா அணியின் கேப்டனாக இர்பான் நியமிக்கப்பட்டார், ஆனால் இர்பான் பதானின் கெட்ட நேரமோ என்னவோ தெரியவில்லை, இரண்டே போட்டியில் பதானிடம் இருந்து கேப்டன் பதவியை பரோடா நிர்வாகம் பறித்து கொண்டது.
இதனால் விரக்தியின் உச்சத்தில் உள்ள இர்பான் பதான், தான் பரோடா அணியில் இருந்து விலகிவிட்டு, வேறு அணிக்காக விளையாட விரும்புவதாகவும் அதற்கு அனுமதி கொடுக்கும் வகையில் தடை இல்லா சான்றிதழ் கேட்டு பரோடா கிரிக்கெட் வாரியத்திற்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு கடிதம் எழுதினார்.
இந்நிலையில் இது குறித்து ஆலோசிப்பதற்காக இன்று கூட்டப்பட்ட பரோடா கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் கூட்டத்தின் முடிவில், இர்பான் பதானின் வேண்டுகோளை ஏற்றுள்ள பரோடா கிரிக்கெட் வாரியம் அவருக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கியுள்ளது.

இது குறித்து பேசிய பரோடா கிரிக்கெட் வாரிய செயலாளர் சினேகல் பாரிக் “இர்பான் பதானின் கோரிக்கையை ஏற்று அவருக்கு தடை இல்லா சான்றிதழ் வழங்குகின்றோம். இனி அவர் விருப்பப்படி வேறு எந்த அணிக்காவும் அவர் விளையாடலாம், அதில் எந்த பிரச்சனையும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.