உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு பிறகு இந்திய வீரர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது என பிசிசிஐ தரப்பு தகவல்கள் கசிந்துள்ளது.

இங்கிலாந்தில் உள்ள சவுதாம்டன் மைதானத்தில் வரும் ஜூன் 18ம் தேதி டெஸ்ட் சாம்பியன்சிப் தொடரின் இறுதி போட்டி நடைபெற இருக்கிறது. புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டிக்காகவும், அதன்பின் நடைபெற இருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காகவும் இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். விரைவில் இயல்பான பயிற்சியிலும் ஈடுபடவிருக்கின்றனர். முதல்முறையாக, டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெறுவதால், இந்த இறுதி போட்டி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்தின் கவனத்தையும் பெற்றுள்ளது.

இவை ஒருபுறமிருக்க, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி முடிவுற்ற பிறகு இந்திய வீரர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருப்பதாக பிசிசிஐ தரப்பு தகவல்கள் கசிந்திருக்கின்றன. அதாவது, ஜூன் 3ஆம் தேதி இங்கிலாந்து சென்றுள்ள இந்திய வீரர்கள் ஜூன் 18-22 வரை நடக்கவுள்ள இறுதிப்போட்டிக்கு பிறகு, ஆகஸ்ட் 4ஆம் தேதி நடக்கவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரிலும் அங்கேயே தங்கி பங்கேற்கவுள்ளனர்.

இந்நிலையில், ஜூன் 22ஆம் தேதிக்கு பிறகு, இங்கிலாந்து தொடருக்கான பயிற்சிகள் ஜூலை 14ஆம் தேதி துவங்கவுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் வீரர்களை தனியாக அறையில் இருக்க வைத்து மென்மேலும் மனா இறுக்கத்தை அதிகரிக்காமல் முழுமையான விடுப்பு அளித்து இங்கிலாந்தை சுற்றிப்பார்க்க அனுமதி அளிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.

ஏற்கனவே, இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக இந்திய வீரர்கள் இந்தியாவிற்கு தற்போது திரும்பி வர இயலாத சூழல் நிலவி வருகிறது. ஆகையால், வீரர்கள் தொடர்ந்து இங்கிலாந்திலேயே இருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அந்த நிலையில், வீரர்கள் தொடர்ந்து ஒரே இடத்தில இருக்காமல் வெளியில் தங்களது குடும்பத்துடன் சென்று வர இந்த அனுமதி கொடுக்கவுள்ளது தெரியவந்துள்ளது.

20 நாட்கள் விடுப்பு முடிந்த பிறகு, இங்கிலாந்து டெஸ்ட் தொடர், ஐபிஎல் தொடர், டி20 உலகக்கோப்பை என தொடர்ந்து பல தொடர்கள் இருப்பதும் இதை விடுப்பிற்க்கான கரணம் என்கிற தகவல்களும் வெளிவருகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *