பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு ரொக்கப்பரிசு வழங்குகிறது பி.சி.சி.ஐ
19 வயதுக்குட்பட்ருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு, விரைவில் ரொக்க பரிசு வழங்கப்படும் என்று பி.சி.சி.ஐ., அறிவித்துள்ளது.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ப்ரிதீவ் ஷா 41 ரன்களும், மனோஜ் கல்ரா 47 ரன்களும் எடுத்து நல்ல துவக்கம் கொடுத்தனர். அடுத்து வந்த சுப்மன் கில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 97 பந்துகளில் 102 ரன்கள் குவித்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 272 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை துரத்தி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் ரோஹைல் நசீர் (18), சாத் கான் (15) மற்றும் முஸா (11) ஆகியோரை தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பியதால் 29.3 ஓவரில் 69 ரன்கள் மட்டுமே எடுத்த போது பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

இதன் மூலம் 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இந்திய அணியை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக விரைவில் , ஜூனியர் இந்திய அணிக்கு ரொக்கபரிசு வழங்கப்படும் என்று பி.சி.சி.ஐ., அறிவித்துள்ளது. அதே போல் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டிற்கு பரிசுகள் வழங்கப்படும் என்றும் பி.சி.சி.ஐ., அறிவித்துள்ளது.