இந்த வருட ஐபிஎல் தொடரில் ஒரு போட்டி கூட மும்பையில் நடைபெற வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.
கொரோனா தாக்கம் காரணமாக கடந்த வருடத்திற்கான தொடர் துபாயில் வைத்து நடத்தப்பட்ட நிலையில், இந்த வருடத்திற்கான தொடர் இந்தியாவிலேயே நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான ஏலம் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் வைத்து நடத்தப்பட்டது. ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை இந்த ஏலத்தின் மூலம் எடுத்து கொண்டனர்.

இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடரானது ஏப்ரல் மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த தொடருக்காக ஒவ்வொரு அணியும் தங்களது வீரர்களை தயார்படுத்தும் வேலையில் ஈடுபட்டு வருகின்றன. மறுபுறம் ஐபிஎல் நிர்வாகமோ, ஐபிஎல் தொடரை எங்கு வைத்து நடத்துவது என்பது குறித்தும், எப்போது நடத்துவது என்பது குறித்தும் தீவிரமாக ஆலோசித்து வருவதாக தெரிகிறது.
இந்தநிலையில், தற்போது வெளியாகியிருக்கும் ஒரு தகவலின்படி இந்த வருட ஐபிஎல் தொடரில் ஒரு போட்டி கூட மும்பையில் வைத்து நடத்தப்பட வாய்ப்புகள் இல்லை என தெரியவந்துள்ளது.

கொரோனாவின் தாக்கம் மஹாராஷ்டிராவில் இன்னும் கட்டுக்குள் வரவில்லை என்பதால் ஐபிஎல் நிர்வாகம் இத்தகைய முடிவை எடுக்க உள்ளதாக தெரிகிறது. அதே போல் சென்னை, கொல்கத்தா, அகமதாபாத், பெங்களூர், டெல்லி ஆகிய மைதானங்களில் போட்டி நடக்கும் என்று கூறப்படுகிறது.