தோனிக்கு நெருக்கடி தராதீர்கள்; விருப்பம்போல் விளையாடட்டும்: அனில் கும்ப்ளே ஆதரவு 1

மகேந்திர சிங் தோனிக்கு நெருக்கடி அளித்து பேட்டிங் செய்யக் கூறாதீர்கள், அவரின் இயல்பான பேட்டிங்கில் விளையாட்டும் என்று முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான தோனி மிகச்சிறந்த ஃபினிஷர். களத்தில் தேவைக்கு ஏற்றார்போல் ஆக்ரோஷமான ஆட்டத்தையும், விக்கெட் இழந்துவிட்டால், நிதானமான பேட்டிங்கையும் வெளிப்படுத்தக்கூடியவர். அதிலும் டி20 போட்டிகளில் தோனியின் பேட்டிங்கில் சிக்ஸர், பவுண்டரிகள் பறக்கும்.

தோனிக்கு நெருக்கடி தராதீர்கள்; விருப்பம்போல் விளையாடட்டும்: அனில் கும்ப்ளே ஆதரவு 2

அணியின் இக்கட்டான நேரத்தில் களமிறங்கி அனாசயமாக ரன்கள் சேர்த்து வெற்றிக்கு அழைத்துச் சென்றவர் தோனி என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், கடந்த சில மாதங்களாக அவரின் பேட்டிங் ஃபார்ம் தொடர்ந்து கேள்விக்குள்ளாகி வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கைக்கு எதிராக தர்மசலாவில் நடந்த போட்டியில் அரை சதம் அடித்தார் தோனி. அதன்பின் 16 போட்டிகளில் களமிறங்கியும் அரை சதம் அடிக்க முடியவில்லை.

தோனியின் பேட்டிங்கிலும், வழக்கமான வேகம், ஆக்ரோஷம், ஷாட்களை வலிமையுடன் அடித்தல் போன்றவை இல்லை. குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தோனியின் பேட்டிங்கைப் பார்த்து ரசிகர்கள் வேதனைப்படும் அளவுக்கு மிக மந்தமாக இருந்தது. இது ஆசியக்கோப்பையிலும் தொடர்ந்தது. ஆசியக் கோப்பையில் தோனியின் மொத்த ஸ்கோர் 80 ரன்களுக்குள்தான் இருக்கும்.

இதனால், தோனியின் பேட்டிங்கை விமர்சித்த சேவாக், வெங்கடேஷ் பிரசாத், சுனில் கவாஸ்கர் ஆகியோர்  உள்ளூர் போட்டிகளில் தோனி கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுரை கூறினார்கள். இவ்வாறு முன்னாள் வீரர்கள் தோனிக்கு அறிவுரை கூறி வரும் நிலையில், முன்னாள் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தோனிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

தோனிக்கு நெருக்கடி தராதீர்கள்; விருப்பம்போல் விளையாடட்டும்: அனில் கும்ப்ளே ஆதரவு 3

இந்திய அணிக்கு 2016 ஜூன் முதல் 2017 ஜூன் வரை பயிற்சியாளராக அனில் கும்ப்ளே பணியாற்றியவர். தோனியின் பேட்டிங்கை மிகவும் நெருக்கத்தில் இருந்து பார்த்தவர் என்பதால், தோனிக்கு ஆதரவாக தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அனில்கும்ப்ளே தி ஸ்போர்ட் ஸ்டாருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

”இந்திய அணி தற்போது நடுவரிசை பேட்டிங்கிற்கு சரியான பேட்ஸ்மேன் அமையாமல் திண்டாடி வருகிறது. ஆனால், ஒருநேரத்தில் தோனி நடுவரிசையில் களமிறங்கிச் சிறந்த ஃபினிஷராக இருந்து ஆட்டத்தை வெற்றியுடன் முடித்து வைத்தார் என்பதற்காகத் தொடர்ந்து இனி அவரை நம்பியிருக்க முடியாது.

தோனிக்கு இதுபோன்ற நெருக்கடிகளையும், அழுத்தங்களையும் தராமல் அவரைச் சுதந்திரமாகவும், அழுத்தங்கள் இல்லாமலும் விளையாடச் செய்ய அணி நிர்வாகம் முயற்சிக்க வேண்டும். தோனி களமிறங்கினால், அவர்தான் வெற்றிக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற சுமையை ஏற்றாதீர்கள்.

வெற்றிக்கு அணியில் உள்ள அனைவருக்கும் சம பொறுப்பு இருக்கிறது. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களைச் சிறந்த ஃபினிஷராக மாற்றுங்கள். இன்னும் உலகக்கோப்பைக்குக் குறுகிய மாதங்களே இருப்பதால், அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். தோனியை கிரிக்கெட்டை மகிழ்ச்சியாக உணர்ந்து விளையாட அனுமதியுங்கள்”.

இவ்வாறு அனில் கும்ப்ளே தெரிவித்தார்.

மேலும், அவரிடம் தங்களுக்கு பிடித்த கேப்டன் யார் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சச்சின் தெண்டுல்கர், கங்குலி, விராட் கோலி, தோனி என யார் பெயரையும் கும்ப்ளே குறிப்பிடவில்லை.

தான் கிரிக்கெட்டில் அறிமுகமாகும் போது இந்திய அணியைச் சிறப்பாக வழிநடத்திச் சென்றவர் முகமது அசாருதீன். அவர்தான் தன்னுடைய மானசீக கேப்டன் என்று கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

47 டெஸ்ட் போட்டிகள், 174 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்குத் தலைமை ஏற்றுள்ள அசாருதீன் 90 ஒருநாள் போட்டிகளில் வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார். இந்தச் சாதனையை கடந்த 2014-ம் ஆண்டில் தோனி முறியடித்தார்.

அனில் கும்ப்ளேயின் மனைவி தீவிரமான தோனி ரசிகர். தோனியை எந்த நிகழ்ச்சியில் சந்தித்தாலும் அவருடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ள மறக்கமாட்டார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *