பேட்டிங் பவுலிங் இரண்டிலும் இந்திய அணிக்கு அழுத்தம் நிறைந்த போட்டியாக இருந்தது. இருவரும் அமைத்த பார்ட்னாஷிப் தான் வெற்றிக்கு காரணமா? பேட்டியில் பதிலளித்த ஹர்திக் பாண்டியா.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்சல் மார்ஷ் ஓப்பனிங் செய்தனர். அதிரடியாக ஆரம்பித்து சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளாக விளாசிய மிச்சல் மார்ஷ், 5 சிக்சர்கள் 10 பவுண்டரிகள் உட்பட வெறும் 65 பந்துகளில் 81 ரன்கள் விளாசினார்.
அடுத்து உள்ளே வந்த ஸ்மித் 22 ரன்கள், இங்கிலிஷ் 26 ரன்கள், கிரீன் 12 ரன்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு அவுட்டாகினர். ஒருகட்டத்தில் 128 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த ஆஸ்திரேலியா, 35.4 ஓவர்களில் 188 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது.
இந்திய அணி சார்பில் சிராஜ் மற்றும் முகமது சமி இருவரும் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஜடேஜா 2 விக்கெட்டுகளைவீழ்த்தினார்.
189 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணிக்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இஷான் கிஷன், விராட் கோலி, சூரியகுமார் மற்றும் கில் ஆகியோர் வரிசையாக சொற்பரன்களுக்கு அவுட்டாக, 39 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை தடுமாற்றம் கண்டது இழந்து இந்திய அணி.
அடுத்துவந்த ஹர்திக் பாண்டியா கேஎல் ராகுலுடன் ஜோடி சேர்ந்து 5வது விக்கெட்டுக்கு 44 ரன்கள் சேர்த்தனர். ஹர்திக் பாண்டியா 25 ரன்களுக்கு அவுட்டானார். களமிறங்கிய ஜடேஜா கேஎல் ராகுலுடன் ஜோடி சேர்ந்து ஆட்டத்தின் போக்கை இந்தியா பக்கம் திருப்பினார்.
6வது விக்கெட்டுக்கு ஜடேஜா-கேஎல் ராகுல் ஜோடி 108 ரன்கள் சேர்த்து, இறுதிவரை நின்று இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தது. ஜடேஜா 45 ரன்களும், கேஎல் ராகுல் 75 ரன்களும் ஆட்டமிழக்காமல் அடித்திருந்தனர். 39.5 ஓவர்களில் 191 ரன்கள் அடித்த இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று தொடரில் முன்னிலை பெற்றது.
முதல் ஒருநாள் போட்டியில் கேப்டன் பொறுப்பேற்று விளையாடிய ஹர்திக் பாண்டியா, போட்டி முடிந்தபின் அளித்த பேட்டியில் வெற்றிக்கான காரணத்தை கூறினார். அவர் பேசியதாவது:
“பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் ஆஸ்திரேலியா அணியினர் அழுத்தம் கொடுத்தார்கள். ஆனால் நிதானத்தை கடைப்பிடித்து, போட்டியின் சூழலுக்கு ஏற்றவாறு விளையாடினோம். ஆட்டம் எங்கள் பக்கம் திரும்பிய பிறகு, எங்களது ஆதிக்கம் உச்சத்தில் இருந்தது. இன்று நாங்கள் விளையாடிய விதம் பெருமிதமாக இருக்கிறது. நிறைய வாய்ப்புகளை உருவாக்கினோம். அதை சரியாக பயன்படுத்திக் கொண்டோம். குறிப்பாக ஜடேஜா மற்றும் சுப்மன்கள் இருவரும் கேட்ச் எடுத்தது திருப்புமுனையாக இருந்தது.
ஜடேஜாவை பற்றி கட்டாயம் கூற வேண்டும். அவரது திறமைக்கு ஏற்றவாறு இன்றைய போட்டியில் செயல்பட்டிருக்கிறார். நீண்ட இடைவேளைக்கு பிறகு, ஒருநாள் போட்டிகளுக்குள் வந்து, இவ்வளவு சிறப்பாக முடித்திருக்கிறார். முக்கியமான, அதுவும் தேவையான கட்டத்தில் கேஎல் ராகுலுடன் ஜோடி சேர்ந்து வேலையை முடித்துக் கொடுத்தார். இது மிகவும் அபாரமான ஆட்டமாக இருந்தது.
இன்றைய போட்டியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஆனாலும் நான் என்ஜாய் செய்து பவுலிங் பண்ணினேன். அதேபோல் பேட்டிங்கும் மிகவும் என்ஜாய் செய்தேன். போட்டியை ஜடேஜா மற்றும் கேஎல் ராகுல் இருவரும் முடித்த விதம் எனக்கு கூடுதல் நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. மேலும் வெளியில் இருந்து அவர்களது பேட்டிங்கை பார்ப்பதற்கு இலகுவாக இருந்தது. ஒட்டுமொத்தமாக போட்டியை வெற்றியில் முடித்தது பெருமிதத்தை தருகிறது.” என்றார்.