கனவு மாதிரி இருக்கு…. அசால்டாக 6 விக்கெட் கைப்பற்றியதில் இருக்கும் ஒரே ரகசியம் இது தான்; முகமது சிராஜ் நெகிழ்ச்சி
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இலங்கை அணி வெறும் 50 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி இலங்கையின் கொழும்பில் நடைபெற்று வருகிறது.
இந்தியா – இலங்கை இடையேயான இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷானகா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இலங்கை அணியின் முதல் விக்கெட்டை பும்ராஹ் முதல் ஓவரிலேயே கைப்பற்றினர்.
போட்டியின் நான்காவது ஓவரை வீசிய முகமது சிராஜ் அந்த ஒரே ஓவரில் பதும் நிஷான்கா (2) , சமரவிக்ரமே (0), அஸலன்கா (0) மற்றும் டி சில்வா (4) ஆகியோரின் விக்கெட்டை கைப்பற்றி இலங்கை அணியை மொத்தமாக காலி செய்தார்.
இது தவிர மொத்தம் 7 ஓவர்களை வீசி அதில் 21 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து 6 விக்கெட்டுகளையும் முகமது சிராஜ் கைப்பற்றினார். அதே போன்று ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளும், பும்ராஹ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றியதன் மூலம் 15.2 ஓவரில் வெறும் 50 ரன்கள் மட்டுமே எடுத்த இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்தநிலையில், இலங்கை அணிக்கு எதிரான இந்த போட்டியில் 6 விக்கெட் கைப்பற்றியது குறித்து பேசிய முகமது சிராஜ், கனவு போன்று உள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இது குறித்து முகமது சிராஜ் பேசுகையில், “கனவில் நடப்பது போன்று உள்ளது. திருவணந்தபுரத்தில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான போட்டியிலும் நான் இதே போன்று பந்துவீசி 4 விக்கெட்டுகளை விரைவாக கைப்பற்றினேன், ஆனால் அந்த போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்ற முடியாமல் போய்விட்டது. எனது வேலை என்ன என்பது எனக்கு தெரியும். இந்த போட்டிக்காக நான் புதிதாக எதையும் முயற்சிக்கவில்லை. ஆடுகளம் பந்துவீச்சிற்கு சாதகமாக இருந்தது, பந்துவும் ஸ்விங் ஆனது. கடந்த போட்டிகளில் என்னால் பந்தை ஸ்விங் செய்ய முடியவில்லை, இந்த போட்டியில் அதை செய்ய முடிந்தது. இதன் காரணமாகவே என்னால் அவுட்ஸ்விங்கர் பந்துகள் மூலம் இலகுவாக விக்கெட்டும் வீழ்த்த முடிந்தது” என்று தெரிவித்தார்.