உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா, நியூஸிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 239 ரன்கள் எடுத்தது.
240 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ரோஹித், ராகுல், கோலி ஆகியோர் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணி 5 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அதன்பிறகு களமிறங்கிய கார்த்திக்கும் வெறும் 6 ரன்களுக்கு ஆட்டமிழக்க 24 ரன்களுக்குள் 4-வது விக்கெட்டையும் இழந்தது இந்திய அணி.
இந்திய அணி 92 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
இந்த நிலையில், தோனியுடன் ஜடேஜா இணைந்தார். தோனி விக்கெட்டை பாதுகாத்து விளையாட, ஜடேஜா நியூஸிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடியளிக்கும் வகையில் துரிதமாக விளையாடினார். இதுவரை மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இந்திய அணி அதன்பிறகு ஓவருக்கு சராசரியாக 5-க்கு மேல் என்ற நிலையில் விளையாடி வந்தது. இதனால், நியூஸிலாந்துக்கு நெருக்கடி அதிகரித்துக்கொண்டே இருந்தது. ஜடேஜாவும் தனது 38-வது பந்தில் அரைசதம் அடித்து நம்பிக்கையளித்தார்.
இந்த இணையும் 7-வது விக்கெட்டுக்கு 100 ரன்களைக் கடந்தது. 14 பந்துகளில் 32 ரன்கள் தேவை என்ற நிலையில் ஜடேஜா போல்ட் பந்தில் ஆட்டமிழந்தார். ஜடேஜா 59 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர் உட்பட 77 ரன்கள் எடுத்தார்.
எனினும், அடுத்த ஓவரின் முதல் பந்தில் தோனி சிக்ஸர் அடித்து நம்பிக்கையளித்தார். ஆனால், அந்த ஓவரில் கப்திலின் சூப்பர் த்ரோவால் தோனி துரதிருஷ்டவசமாக ஆட்டமிழந்தார். இதனால், இந்திய அணியின் வெற்றி நம்பிக்கை முற்றிலுமாக தகர்ந்தது. தோனி 72 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார்.
அதன்பிறகு, புவனேஷ்வர் குமார் மற்றும் சாஹல் ஆட்டமிழக்க இந்திய அணி 49.3 ஓவர்களில் 221 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம், நியூஸிலாந்து அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.
இந்த தோல்விக்கு காரணமாக இருக்கும் சரியான ஐந்து காரணிகளை இங்கே தொகுத்துள்ளோம்
#1.ஆடுகளத்தின் தன்மையில் மாற்றம்
செமி பைனல் போட்டி என்பதால் அந்த போட்டி நடைபெற இரண்டு நாட்கள் ஐசிசி ஒதுக்கியிருந்தது. இதன் காரணமாக முதல் நாளில் 46.6 ஓவர்களில் 211 ரன்களில் நேற்று ஆட்டம் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் அடுத்த நாளில் வந்து மீதமுள்ள ஓவர்கள் அவர்கள் ஆடிய பின்னர் நியூசிலாந்து அணி 239 ரன்கள் எடுத்தது. மழையின் காரணமாக ஆடுகளத்தின் தன்மை முற்றிலுமாக மாறிப்போனது.
அடுத்தநாள் வந்து பேட்டிங் பிடிக்கும்போது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது. நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர்கள் டிரென்ட் போல்ட் மற்றும் மேட் ஹென்றி ஆகியோர் ஆடுகள தன்மை, காற்று மற்றும் வானிலையை சரியாக பயன்படுத்தி இந்தியாவின் துவக்க வீரர்கள் அனைவரையும் காலி செய்தனர். இதற்கு காரணம் ஆடுகளத்தின் தன்மை மாறியதே ஆகும்.