பேட்டிங் செய்ய களமிறங்குவதற்கு முன்னர் ஹர்திக் பாண்டியா என்னிடம் சில வார்த்தைகள் சொல்லி அனுப்பினார், அது உதவியது என்று மனம் திறந்து பேசியுள்ளார் ஷுப்மன் கில்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய மூன்றாவது டி20 போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று பேட்டிங் செய்வதற்கு முடிவு செய்தார்.
முதல் இரண்டு போட்டிகளிலும் துவக்க வீரர்கள் ஷுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் இருவருமே சோதப்பியதால், 3வது டி20ல் இருவரில் ஒருவர் வெளியேற்றப்பட்டு ப்ரிதிவி ஷா பிளேயிங் லெவனுக்குள் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஷுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் இருவருமே மீண்டும் ஒருமுறை ஓப்பனிங் பேட்டிங் செய்தனர். இஷான் கிஷன் 1 ரன் மட்டுமே அடித்து துவக்கத்திலேயே ஆட்டமிழந்தார். ராகுல் திரிப்பாதி, வந்த வேகத்திலேயே அதிரடியை வெளிப்படுத்தி 22 பந்துகளில் 44 ரன்கள் அடித்து இந்திய அணிக்கு டெம்போ செட் செய்துவிட்டு ஆட்டமிழந்தார்.
ஷுப்மன் கில், 35 பந்துகளில் அரைசதம் கடந்தபின், அசுர வேகத்தில் ரன் குவிப்பில் ஈடுபட்டார். சூரியகுமார் யாதவ் 24(13) ரன்கள், ஹர்திக் பாண்டியா 30(17) ரன்கள் என இருவரும் தங்களது பங்களிப்பை கொடுத்துவிட்டு அவுட்டாகினர்.
மறுனையில் அதிரடியாக விளையாடிய ஷுப்மன் கில், டி20 போட்டிகளில் முதல் சதத்தை பூர்த்தி செய்தார். இறுதிவரை அவுட்டாகாமல் 123(63) விளாசினார். இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 234 ரன்கள் சேர்த்தது.
இந்த கடினமான இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி 21 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. பவர்பிளே ஓவர்களிக் வெறும் 30 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அடுத்த விக்கெட் 53 ரன்களுக்கு விழுந்தது. பின்னர் வரிசையாக நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் வெளியேற, 12.1 ஓவர்களில் 66 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட் ஆனது.
168 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று, 2-1 என டி20 தொடரை கைப்பற்றியது. வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய கில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
அப்போது பேசிய ஷுப்மன் கில், “நான் பயிற்சி செய்தது, இன்றைய போட்டியில் நன்றாக வெளிப்பட்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுக்கிறது. மிகப்பெரிய ஸ்கொர் அடிக்கவேண்டும் என்று முனைப்புடன் இருந்தேன். இலங்கை டி20 தொடரில் நடக்கவில்லை. இப்போது அது நிறைவேறியதை பார்க்கையில் மகிழ்ச்சியாக உள்ளது.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அணுகுமுறை உள்ளது. போட்டிக்கு முன்பு ஹர்திக் பாண்டியா என்னிடம் பேசும்போது, உன்னுடைய ஆட்டத்தை நீ ஆடு, வித்தியாசமாக எதையும் முயற்சிக்க வேண்டாம் என கூறினார்.
உண்மையில் நான் பிளேயிங் லெவனில் இருப்பேனா என்றெல்லாம் நினைத்தேன். அப்போது ஹர்திக் பாண்டியா எனக்கு பக்கபலமாக இருந்து, தொடர்ந்து அணியில் இருக்க வைத்தார். அதற்கு பலம் சேர்த்தது மகிழ்ச்சி.
(தொடர்ந்து சதங்கள் அடிப்பது பற்றி) இந்திய அணிக்காக விளையாடுவதற்காக கனவு கண்டோம். இப்போது அதிஷ்டவசமாக, மூன்றுவிதமான போட்டிகளிலும் விளையாடி வருகிறோம். நாட்டிற்க்காக ஆடும்போது ஏன் சலிப்பு வந்துவிடப்போகிறது. நிச்சயம் இல்லை.” என கூறினார்.