என்னுடைய பலம் மற்றும் பலவீனம் எது என்பது எனக்கு நன்றாக தெரியும். சேப்பாக்கம் மைதானம் நன்கு பழக்கப்பட்டது. இந்த மைதானத்திற்கு வரும் முன்பு நான் நல்ல பார்மில் இருந்தேன் என ஆட்டநாயகன் விருது வென்ற பிறகு பேட்டி அளித்துள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்.
சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெற்றது. போட்டியில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பட்லர், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் தேவ்தத்படிக்கல் ஆகியோர் நல்ல பங்களிப்பை கொடுக்க 20 ஓவர்களில் 175 ரன்கள் அடித்தது ராஜஸ்தான் அணி.

இதில் ரவிச்சந்திரன் அஸ்வின் வழக்கமாக இறங்கும் இடத்தில் பேட்டிங் செய்யாமல் சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மூன்று விக்கெட்டுகளை இழந்த பிறகு, பேட்டிங் செய்ய வந்த அஸ்வின் இரண்டு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி உட்பட 22 பந்துகளில் 30 ரன்கள் அடித்தபிறகு ஆட்டம் இழந்தார்.
பிறகு பந்துவீச்சிலும் மிடில் ஓவர்களில் அசத்தி, சிஎஸ்கே அணியை கட்டுக்குள் வைத்திருந்தார். நான்கு ஓவர்களில் 22 ரன்கள் விட்டுக்கொடுத்து சிவம் தூபே மற்றும் அஜிங்கிய ரகானே இருவரின் விக்கெட்டையும் முக்கியமான கட்டத்தில் தூக்கி அழுத்தம் கொடுத்தார். பின் கடைசி ஓவரில் பரபரப்பாக முடிந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மூன்று ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் அசத்தி, நேர்த்தியான ஆல்ரவுண்டர் ஆட்டத்தை வெளிப்படுத்திய ரவிச்சந்திரன் அஸ்வின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த விருதைப் பெற்ற பிறகு பேட்டி அளித்த அஸ்வின்,
“எனக்கு ஆட்டநாயகன் விருது கிடைத்ததில் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும் என்று நினைக்கிறேன். நான் எப்போதெல்லாம் டாப் ஆர்டரில் பேட்டிங் இறங்குகிறேனோ, அப்போது சில பேச்சுக்கள் அடிபடுகின்றன. நான் வம்படியாக சென்று வற்புறுத்தி களமிறங்குகிறேன் என்று. ஆனால் அது அப்படியல்ல. முற்றிலும் தவறான கருத்து.
அணியினர் எனக்கு அந்த குறிப்பிட்ட ரோலை கொடுக்கின்றனர். ஏனெனில் முதல் விக்கெட்டில் இருந்தே நான் பேட் அணிந்துகொண்டு பேட்டிங் இறங்குவதற்கு தயாராக காத்திருப்பேன். எது சரியான நேரம் என்று உணர்கிறார்களோ அப்போது எனக்கு பேட்டிங் கொடுப்பார்கள்.
இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்த பிறகு, இன்னும் சில ஓவர்கள் நின்று ஆடவேண்டும். ஸ்பின்னர்களை எதிர் கொள்ள வேண்டும் என்று இருந்தது. ஆகையால் நான் களம் இறங்கினேன்.

மேலும் டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு இங்கு நல்ல பார்மில் வந்திருக்கிறேன். அதுவும் பந்தை நன்றாக சுழலவைக்க மற்றும் டர்ன் செய்ய உதவியது. வெற்றியோ, தோல்வியோ அதில் என்னுடைய பங்களிப்பை கொடுக்க வேண்டும் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ன சொல்வார்கள் என்பதற்காக நான் ஒருபோதும் விளையாட முடியாது. அன்று ஆட்டத்தில் என்ன தேவை என்பதை யூகித்து விளையாடுகிறேன்.” என்றார்.