“இளம் வீரர்கள் தோனியிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்” பும்ரா கருத்து!!

வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் வீரர்கள் தோனியிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். அது அவர்களின் வளர்ச்சிக்கு ஒரு உந்துதலாக இருக்கும் என வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ராஹ் கருத்து தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பையில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வந்தாலும் நடுவரிசை பேட்டிங் என்பது தற்போது வரை கேள்விக்குறியாக இருந்து வருகிறது உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக ஆஸ்திரேலியா நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக முன்னாள் கேப்டன் தோனி நான்காவதாக களமிறங்கிய போட்டிகளில் சிறப்பாக ஆடியிருக்கிறார்.

உலகக் கோப்பை தொடருக்கு நான்காவது இடத்தில் ஆடுவதற்கு விஜய் சங்கர் எடுக்கப்பட்டது. பிசிசிஐ இன் இந்த முடிவு பல விமர்சனங்களை சந்தித்தது. விஜய் சங்கரும் அதற்கு ஏற்றார்போல் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 15 ரன்கள், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 29 ரன்கள் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 14 ரன்கள் என மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

மறு பக்கம் கேதர் ஜாதவ் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்தார்.  வெஸ்ட் இண்டீஸ் எதிரான போட்டியில் அதே நிலையை தொடர தவறி 7 ரன்களுக்கு வெளியேறினார்.

அனுபவமிக்க இந்திய வீரரான எம் எஸ் தோனி தனது மெதுவான பேட்டிங் மூலம் விமர்சனங்களை சந்தித்து வருகிறார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரிலும் தற்போது உலக கோப்பை தொடரிலும் மிக மோசமான ஸ்டிரைக் ரேட்டில் தோனி ஆடுவது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியாக இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் துவக்கத்தில் தோனி மிகவும் தடுமாறியது அனைவராலும் காண முடிந்தது.

ஏறக்குறைய டெஸ்ட் போட்டிகளைப் போலவே ஆடி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அதிக பந்துகளை சந்திக்க நேர்ந்த பிறகு தோனியின் அதிரடி அனைவரும் கண்டிருப்பர். அதேபோலத்தான் வெஸ்ட் இண்டீஸ் போட்டியிலும் நடைபெற்றது. சுமார் 40 பந்துகளுக்கு 19 ரன்கள் எடுத்திருந்த தோனி போட்டி முடிவின் போது 61 பந்துகளுக்கு 56 ரன்கள் எடுத்திருந்தார். 268 ரன்களை இந்திய அணி எடுக்க முடிந்ததற்கு ஒரு காரணமாகவும் அமைந்தார்.

தோனி குறித்து கருத்து தெரிவித்த வேகப்பந்துவீச்சாளர் பும்ராஹ் கூறுகையில், தோனியின் அனுபவத்திலிருந்து வளர்ந்து வரும் இளம் வீரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அவரைப்போல அழுத்தங்களை நேர்த்தியாக கையாள்வதில் எவரும் இல்லை.

துவக்கத்தில் அவர் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் அவரின் விக்கெட் இந்திய அணிக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்ந்து இறுதி வரை எடுத்துச் சென்று அணிக்கு நல்ல ஸ்கோரை எட்டுவதை பலமுறை நிகழ்த்தியிருக்கிறார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அவர் ஆடிய ஆட்டம் மிகச்சிறந்தவற்றில் ஒன்று. ஏனெனில் முன்னணி வீரர்கள் அனைவரும் விரைவில் ஆட்டமிழந்த பிறகு 200 ரன்கள் வருவதே கடினமாக இருந்தது. அத்தகைய நேரத்தில் பொறுப்புடன் ஆடிய அவரை விமர்சிப்பது சரியானதாக படவில்லை. அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை அதிகமாக இருக்கிறது என்பதையும் நான் இங்கு குறிப்பிடுகிறேன் என்றார்.

Mohamed:

This website uses cookies.