இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மிக கோரமான பந்துவீச்சு சந்தித்த சுழல் பந்துவீச்சாளர்கள் சஹால் மோசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.
பிர்மிங்ஹம் மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பையின் 38 வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இரு அணிகளும் மோதின. முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 337 ரன்கள் குவித்தது.
இந்திய அணிக்கு சுழற்பந்து வீச்சாளர்களான குலதீப் மற்றும் சஹால் இருவருக்கும் இன்று மிக மோசமாக அமைந்தது. இந்த ஜோடி 20 ஓவர்களில் 168 ரன்கள் கொடுத்து இருந்தது.
மறுமுனையில் முகமது சமி மற்றும் பும்ராஹ் இருவரும் ரன்களை கட்டுப்படுத்தி அவ்வபோது விக்கெட்டுகளையும் வீழ்த்தி வந்தனர். குறிப்பாக முகமது சமி இன்றைய போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனையை நிகழ்த்தினார்.
இவர் தொடர்ந்து மூன்று போட்டிகளிலும் 4 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று போட்டிகளில் மொத்தம் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
சஹால் 10 ஓவர்களில் 88 ரன்கள் கொடுத்து இருந்தார். இது உலக கோப்பையில் ஒரு இந்திய பந்துவீச்சாளர்கள் கொடுத்த அதிகபட்ச ரன்களாகும். இதற்கு முன்னால் 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் ஜவகல் ஸ்ரீநாத் 10 ஓவர்களில் 87 ரன்கள் கொடுத்ததே அதிகமாக இருந்தது. இந்த மோசமான சாதனையை தற்போது சஹால் முறியடித்துள்ளார்.
அதன்பிறகு ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 306 ரன்கள் மட்டுமே எடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்திய அணி சார்பில் ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தினார். அதற்கு அடுத்ததாக கோலி 66 ரன்கள் அடித்தது அதிகபட்சமாக இருந்தது. பந்துவீச்சில் முகமது சமி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.