மிரட்டிட்டாங்க… சத்தியமா இத நானே எதிர்பார்கல; உலகக்கோப்பையில் எல்லாரும் இந்தியாவ பார்த்து நடுங்க போறாங்க; சோயிப் அக்தர் ஓபன் டாக்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இலங்கையை இலகுவாக வீழ்த்திய இந்திய அணியை முன்னாள் பாகிஸ்தான் வீரரான சோயிப் அக்தர் வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சாம்பியனை தீர்மானிக்கும் இறுதி போட்டி இலங்கையின் கொழும்பில் நடைபெற்றது.
இந்தியா இலங்கை இடையேயான இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
கெத்தாக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இலங்கை அணி, முகமது சிராஜின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வெறும் 50 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
பந்துவீச்சில் இந்திய அணி சார்பில் முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும், பும்ராஹ் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதன்பின் 51 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு இஷான் கிஷனும், சுப்மன் கில்லும் துவக்க வீரர்களாக களமிறங்கினர். எவ்வித டென்ஷனும் இல்லாமல் ஈசியான பேட்டிங்கை வெளிப்படுத்திய இந்த ஜோடி 6.1 ஓவரிலேயே இலக்கையும் இலகுவாக எட்டியது. இதன் மூலம் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, ஆசிய கோப்பை தொடரின் சாம்பியன் பட்டத்தையும் வென்றது.
இந்தநிலையில், இந்திய அணி குறித்து பேசியுள்ள முன்னாள் பாகிஸ்தான் வீரரான சோயிப் அக்தர், எதிர்வரும் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அதிக ஆபத்தான அணியாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து சோயிப் அக்தர் பேசுகையில், “ரோஹித் சர்மா சிறந்த கேப்டனாக மாறியுள்ளார். அவரும் இந்திய அணியும் சரியான முடிவுகள் எடுத்து அதன் மூலம் இலங்கை அணியை இலகுவாக வீழ்த்திவிட்டனர். இலங்கை அணிக்கு எதிரான இந்த வெற்றி இந்திய அணிக்கு மிகப்பெரும் உத்வேகத்தை கொடுக்கும். உலகக்கோப்பை தொடர் இந்த முறை இந்தியாவில் நடைபெற இருப்பதும் இந்திய அணிக்கு கூடுதல் பலம் தான், இந்த முறை இந்திய அணி அதிக ஆபத்தான அணியாக திகழும் என நம்புகிறேன், ஆனால் அதற்காக மற்ற அணிகளை நான் குறைத்து மதிப்பிடவில்லை. முகமது சிராஜ் தனது சிறப்பான பந்துவீச்சின் மூலம் இந்திய அணியின் வெற்றியை மிக இலகுவாக்கினார். உண்மையை சொல்ல வேண்டுமெனில் இலங்கையை இந்திய அணி இவ்வளவு இலகுவாக வீழ்த்தும் என நான் எதிர்பார்க்கவே இல்லை. உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானிற்கு மட்டும் இல்லை அனைத்து அணிகளுக்கும் இந்திய அணி சவாலனதாக இருக்கும், அனைத்து வகையிலும் இந்திய அணி வலுவான அணியாக உள்ளது” என்று தெரிவித்தார்.