எனக்கும் அது தான் ஆசை ஆனா…? முகமது சிராஜிற்கு தொடர்ச்சியான ஓவர்கள் கொடுக்காததற்கான காரணத்தை கூறிய ரோஹித் சர்மா
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் முகமது சிராஜிற்கு அதிகமான ஓவர்கள் கொடுக்காததற்கான காரணத்தை இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா வெளியிட்டுள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சாம்பியனை தீர்மானிக்கும் இறுதி போட்டி இலங்கையின் கொழும்பில் நடைபெற்றது.
இந்தியா இலங்கை இடையேயான இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
கெத்தாக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இலங்கை அணி, முகமது சிராஜின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வெறும் 50 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
பந்துவீச்சில் இந்திய அணி சார்பில் முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும், பும்ராஹ் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதன்பின் 51 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு இஷான் கிஷனும், சுப்மன் கில்லும் துவக்க வீரர்களாக களமிறங்கினர். எவ்வித டென்ஷனும் இல்லாமல் ஈசியான பேட்டிங்கை வெளிப்படுத்திய இந்த ஜோடி 6.1 ஓவரிலேயே இலக்கையும் இலகுவாக எட்டியது. இதன் மூலம் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, ஆசிய கோப்பை தொடரின் சாம்பியன் பட்டத்தையும் வென்றது.
இந்தநிலையில், இந்திய அணியின் இந்த வெற்றி குறித்து பல்வேறு விசயங்கள் பேசிய இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா, முகமது சிராஜிற்கு தொடர்ச்சியான ஓவர்கள் கொடுக்காததற்கான காரணத்தையும் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து ரோஹித் சர்மா பேசுகையில், “ஒரு வேகப்பந்து வீச்சாளர் இது போன்று செயல்படுவதை பார்க்கும் போது மகிழ்ச்சியளிக்கிறது. இது போன்ற ஒரு வீரர் அணியில் இருப்பது ஒவ்வொரு கேப்டனுக்கும் பெருமையான விசயம் தான். இந்திய அணியில் பல திறமையான வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். ஒவ்வொரு வீரர்களுக்கும் ஓவ்வொரு தனித்திறமை உள்ளது. முகமது சிராஜின் பந்துவீச்சு மிக சிறப்பாக இருந்தது. அவர் தொடர்ச்சியாக 7 ஓவர்கள் வீசினார், அவருக்கு கூடுதலான ஓவர்கள் வழங்க வேண்டும் என்றே நானும் விரும்பினேன். ஆனால் பயிற்சியாளர்களிடம் இருந்து எனக்கு ஒரு செய்தி வந்தது. முகமது சிராஜ் வீசிய 7 ஓவர்களே அதிகமானது என்பதால் அவருக்கு மேலும் கூடுதலான ஓவர்கள் கொடுக்க வேண்டாம் என பயிற்சியாளர்கள் கூறினர், இதன் காரணமாகவே அவருக்கு கூடுதலான ஓவர்கள் கொடுக்கவில்லை” என்று தெரிவித்தார்.