ஆசிய கோப்பையை மிஸ் பண்ணிட்டோம்… ஆனா உலகக்கோப்பையில் நாங்க தான் ஆபத்தான டீம்; ஷாகிப் அல் ஹசன் அதிரடி பேச்சு
எதிர்வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணி ஆபத்தான அணியாக இருக்கும் என அந்த அணியின் கேப்டனான ஷாகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்திய அணியும், வங்கதேச அணியும் மோதின.
இலங்கையின் கொழும்பில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷாகிப் அல் ஹசன் 80 ரன்களும், தவ்ஹித் ஹிர்தாய் 54 ரன்களும் எடுத்தனர்.
இதன்பின் 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரரான சுப்மன் கில் நீண்ட நேரம் போராடி 133 பந்துகளில் 121 ரன்களும், கடைசி நேரத்தில் போராடிய அக்ஷர் பட்டேல் 34 பந்துகளில் 42 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், மற்ற வீரர்கள் தங்களது பங்களிப்பை செய்து கொடுக்க தவறியதால் 49.5 ஓவரில் 259 ரன்கள் எடுத்த போது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்தநிலையில், இந்திய அணியுடனான இந்த வெற்றி குறித்து பேசிய வங்கதேச அணியின் கேப்டனான ஷாகிப் அல் ஹசன், எதிர்வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணி ஆபத்தான அணியாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஷாகிப் அல் ஹசன் பேசுகையில், “எங்கள் அணியின் பல சீனியர் வீரர்கள் காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் விளையாடவில்லை, இதனால் அதிகமான இளம் வீரர்களுடன் ஆசிய கோப்பை தொடரை எதிர்கொண்டோம். சீனியர் வீரர்கள் பலர் இல்லாத போதிலும் நாங்கள் இந்த தொடரில் சிறப்பாக விளையாடி, இந்திய அணியை தற்போது வீழ்த்தியுள்ளோம், இது சாதரண விசயம் கிடையாது. இந்திய அணிக்கு எதிரான போட்டி நடைபெற்ற ஆடுகளம் சவாலானது. சீனியர் வீரர்கள் இல்லாததால் தான் இந்த போட்டியில் நாங்கள் சில தோல்விகளை சந்தித்தோம், மற்றபடி நாங்கள் இந்த தொடரில் மிக சிறப்பாகவே விளையாடினோம். முக்கிய வீரர்கள் அனைவரும் திரும்பிவிட்டால் எதிர்வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணி அதிக ஆபத்தான அணியாக இருக்கும் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.