இதுல என்ன சந்தேகம்… 2023 ஒருநாள் உலகக் கோப்பையை இந்திய அணி தான் வெல்லும் ; காரணத்துடன் விளக்கிய ரவி அஸ்வின்
எதிர்வரும் 2023 ஒரு நாள் உலகக் கோப்பை தொடரை இந்திய அணி தான் வெல்லும் என்று இந்திய அணியின் அனுபவ வீரர் ரவி அஸ்வின் தெரிவித்துள்ளார்.
நான்காவது முறையாக இந்திய கிரிக்கெட் வாரியம், 50-ஓவர் உலகக் கோப்பையை நடத்துகிறது. கடைசியாக 2011 ஆம் ஆண்டு எடுத்து நடத்தியது. அப்போதுதான் இந்திய அணியும் கடைசியாக உலககோப்பையை வென்றது.
அதற்கு அடுத்ததாக, 2015 மற்றும் 2019 உலககோப்பைகளில் இந்திய அணி வெற்றி பெறும் அணியாக கருதப்பட்டது. ஆனால் கடைசியில் கோப்பையை வெல்ல முடியவில்லை. இம்முறை கோப்பையை வென்று மீண்டும் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு பெருமிதம் சேர்க்க வேண்டும் என்று பல திட்டங்களை பிசிசிஐ செயல்படுத்தி வருகிறது.
அந்த திட்டத்தில் ஒன்றாக, ரோகித் சர்மா மற்றும் டிராவிட் உடன் பிசிசிஐ நடத்திய ஆலோசனையில் குறிப்பிட்ட 20 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, அடுத்த ஒன்பது மாதத்திற்கு உலகக்கோப்பை வரை அவர்கள் மட்டுமே மாறி மாறி பிளேயிங் லெவனில் விளையாடுவார்கள் என திட்டமிடப்பட்டிருக்கிறது. இன்னும் இந்த வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிடவில்லை.
இதனால் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் ஒவ்வொரு வீரர்களும் தங்களுடைய அபாரமான பார்மை வெளிப்படுத்தி கடுமையாக போட்டி போட்டுக் கொண்டுள்ளனர்.இதன் காரணமாக இந்திய அணி தற்போது மிகவும் பலம் வாய்ந்த அணியாக காட்சியளிக்கிறது.
இந்த நிலையில் எதிர்வரும் 2023 ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் பலம் வாய்ந்த அணியாக கருதப்படும் இந்திய அணி குறித்தும், 2023 உலக கோப்பை தொடரில் எந்த அணி வெற்றி பெறும் என்பது குறித்தும் பெரும்பாலான முன்னால், இந்நாள் வீரர்கள் மற்றும் கிர்க்கெட் வல்லுனர்கள் பேசி வருகின்றனர்.
அந்த வகையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் அஸ்வின், எதிர்வரும் 2023 உலகக் கோப்பை தொடரை இந்திய அணி தான் கைப்பற்றும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரவி அஸ்வின் தெரிவித்ததாவது, “இந்திய அணி தன்னுடைய சொந்த மைதானத்தில் கடைசியாக சந்தித்த 18 போட்டிகளில் 14- 4 , 14 போட்டிகளில் வெற்றி பெற்று 4 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. இந்த அடிப்படையில் வைத்து பார்த்தால் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு 78 முதல் 80 சதவீத வாய்ப்புகள் உள்ளது. இந்திய அணி இந்த 18 போட்டிகளையும் வெவ்வேறு விதமான மைதானத்தில் விளையாடியிருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இதில் இந்திய அணி தோல்வியை தழுவிய 4 போட்டிகள் சென்னை, மும்பை, புனே மற்றும் லக்னோ மைதானத்தில் நடைபெற்றதாகும். மேலும் இது அனைத்துமே மாலை வேளையில் நடைபெற்ற போட்டியாகும், மேலும் அந்தப் போட்டிகளில் எல்லாம் இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்திருந்தது என்றும் தெரிவித்திருந்த அஸ்வின் எதிர்வரும் 2023 ஒரு நாள் உலகக்கோப்பை தொடரை வெல்வதற்கு இந்திய அணிக்கு தான் அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது என்றும் இதன் மூலம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.