சூர்யகுமார் யாதவ்
எப்பவுமே அவர் தான் மாஸ்… என்னை அவர் கூட கம்பேர் செய்யாதீங்க; பெருந்தன்மையுடன் பேசிய சூர்யகுமார் யாதவ்

மிஸ்டர் 360 டிகிரி வீரர் என்ற பெருமை டிவில்லியர்ஸை மட்டுமே சாரும் என இந்திய அணியின் நம்பிக்கை நாயகனான சூர்யகுமார் யாதவ் பெருந்தன்மையுடன் தெரிவித்துள்ளார்.

பல வருட போராட்டத்திற்கு பிறகு இந்திய அணியில் இடம்பிடித்த சூர்யகுமார் யாதவ், தனது மிரட்டல் பேட்டிங்கின் மூலம் வெகு விரைவாகவே இந்திய அணியில் தனக்கான இடத்தை கெட்டியாக பிடித்து கொண்டார்.

சூர்யகுமார் யாதவ்

ஒவ்வொரு போட்டியிலும் இந்திய அணிக்கான தனது பங்களிப்பை குறையே சொல்ல முடியாத அளவிற்கு செயல்பட்டு வரும் சூர்யகுமார் யாதவ், ஒரு வருடத்திற்குள் டி.20 போட்டிகளுக்கான தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடித்தார்.

நடந்து முடிந்த டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதி சுற்று வரை தகுதி பெறுவதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவரான சூர்யகுமார் யாதவ், நியூசிலாந்து அணிக்கு எதிரான நடப்பு டி.20 தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

சூர்யகுமார் யாதவ்

நியூசிலாந்து அணிக்கு எதிரான நடப்பு டி.20 தொடரின் இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை பாரபட்சமே பார்க்காமல் பந்தாடிய சூர்யகுமார் யாதவ் 49 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் சில ஷாட்களை இதுவரை தான் பார்த்ததே இல்லை என நியூசிலாந்து அணியின் கேப்டன் ஓபனாக பேசும் அளவிற்கு தரமான ஆட்டத்தை சூர்யகுமார் யாதவ் வெளிப்படுத்தினார்.

தொடர்ச்சியாக பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வரும் சூர்யகுமார் யாதவை ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் வியந்து பாராட்டி வருகின்றனர். சூர்யகுமார் யாதவை பற்றி பேசும் பலரும், சூர்யகுமார் யாதவை முன்னாள் வீரர் டிவில்லியர்ஸுடன் ஒப்பிட்டு, தற்போதைய டிவில்லியர்ஸ் சூர்யகுமார் யாதவ் தான் என பேசி வரும் நிலையில், டிவில்லியர்ஸுடன் ஒப்பிட்டு பேசப்படும் அளவிற்கு தான் இன்னும் வளரவில்லை என சூர்யகுமார் யாதவே தெரிவித்துள்ளார்.

சூர்யகுமார் யாதவ்

இது குறித்து சூர்யகுமார் யாதவ் பேசுகையில், “என்னை பொறுத்தவரையில் ஒரே ஒரு 360 டிகிரி வீரர் மட்டும் தான், அது டிவில்லியர்ஸ் மட்டும் தான். டிவில்லியர்ஸுடன் ஒன்றாக இணைந்து விளையாடும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை, ஆனால் நான் அவருடன் பேசியுள்ளேன் அதையே நான் எனக்கு கிடைத்த பெரிய கவுரவமாக கருதுகிறேன். என்னால் முடிந்தவரையில் சிறப்பாக விளையாட முயற்சிக்கிறேன். நான் சூர்யகுமார் யாதவாக இருப்பதற்கு மட்டுமே விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published.