ரோஹித் சர்மா
பும்ராஹ்விற்கு பதிலாக முகமது ஷமியை எடுத்தது ஏன்…? மவுனம் கலைத்த கேப்டன் ரோஹித் சர்மா

காயம் காரணமாக விலகிய பும்ராஹ்விற்கு பதிலாக முகமது ஷமியை தேர்வு செய்ததற்கான காரணத்தை கேப்டன் ரோஹித் சர்மா வெளியிட்டுள்ளார்.

நடப்பு டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் மிக முக்கியமான போட்டியான இன்றைய போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோத உள்ளன.

பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் நடைபெற வாய்ப்புள்ள இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு துவங்க உள்ளது.

ரோஹித் சர்மா

 

கடந்த டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் அணியை எதிர்கொண்ட இந்திய அணி, 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி, முக்கியமான இரண்டாவது போட்டியில் தோல்வியடைந்து இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் இழந்து வெளியேறியது. இதனால் நடப்பு டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலாவது பாகிஸ்தானிற்கு இந்திய அணி சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.

இந்தநிலையில், பாகிஸ்தான் அணியுடனான இந்த போட்டி குறித்தான செய்தியாளர் சந்திப்பில் பல்வேறு விசயங்களை வெளிப்படையாக பேசிய ரோஹித் சர்மா, காயம் காரணமாக விலகிய பும்ராஹ்விற்கு பதிலாக முகமது ஷமியை தேர்வு செய்ததற்கான காரணத்தையும் வெளியிட்டுள்ளார்.

முகமது ஷமி

இது குறித்து ரோஹித் சர்மா பேசுகையில், “பும்ராஹ் காயம் காரணமாக விலகிய போதே அவரது இடத்தில் அனுபவமிக்க வீரர் தான் தேவை என நினைத்தோம். முகமது ஷமி அதிக அனுபவமுடைய வீரர். இதற்கு முன் அவர் உலகக்கோப்பை தொடர்களிலும் விளையாடியுள்ளார். அவர் மிக சிறந்த வீரர் என்பதிலும் அவரது திறமையிலும் எந்த சந்தேகமும் இல்லை. அவரது அனுபவத்தின் காரணமாக தான் பும்ராஹ்விற்கு பதிலாக முகமது ஷமியை தேர்வு செய்தோம். பும்ராஹ்வின் இடத்தை சரி செய்ய முகமது ஷமியே சரியான நபராக இருப்பார். முகமது ஷமி புதிய பந்தை சிறப்பாக வீசுவதில் வல்லவர். தற்போது அவருக்கு போதிய பயிற்சி கிடைத்துள்ளது. முகமது ஷமி இந்திய அணிக்கான தனது பங்களிப்பை சரியாக செய்து கொடுப்பார் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *