ஆச்சரியப்படுறதுக்கு ஒன்னுமே இல்ல… வங்கதேச அணிக்கு எதிரான இந்திய அணியின் தோல்வி குறித்து பேசிய இலங்கை கேப்டன்
வங்கதேச அணிக்கு எதிரான இந்திய அணியின் தோல்வி தனக்கு பெரிய ஆச்சரியத்தை கொடுக்கவில்லை என இலங்கை அணியின் கேப்டனான தசுன் ஷானகா தெரிவித்துள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்திய அணியும், வங்கதேச அணியும் மோதின.
இலங்கையின் கொழும்பில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷாகிப் அல் ஹசன் 80 ரன்களும், தவ்ஹித் ஹிர்தாய் 54 ரன்களும் எடுத்தனர்.
இதன்பின் 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரரான சுப்மன் கில் நீண்ட நேரம் போராடி 133 பந்துகளில் 121 ரன்களும், கடைசி நேரத்தில் போராடிய அக்ஷர் பட்டேல் 34 பந்துகளில் 42 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், மற்ற வீரர்கள் தங்களது பங்களிப்பை செய்து கொடுக்க தவறியதால் 49.5 ஓவரில் 259 ரன்கள் எடுத்த போது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்தநிலையில், வங்கதேச அணிக்கு எதிரான இந்திய அணியின் இந்த தோல்வி குறித்து பேசிய இலங்கை அணியின் கேப்டனான தசுன் ஷானகா, இந்திய அணியின் தோல்விக்கு தனக்கு பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை என தெரிவித்துள்ளார்.
இது குறித்து தசுன் ஷானகா பேசுகையில், “வங்கதேச அணிக்கு எதிரன போட்டிக்கான இந்திய அணி தனது முழு அணியையும் மாற்றியமைத்திருந்தது. அந்த அணியின் மிக முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தால் இந்திய அணியின் இந்த தோல்வி எனக்கு எந்த ஆச்சரியத்தையும் ஏற்படுத்தவில்லை. இது அனைத்து அணிகளுக்கும் நடக்க கூடியது தான், ஒவ்வொரு அணிகளும் தோல்விகளை சந்தித்து தான் ஆக வேண்டும். இந்திய அணி வலுவானது என்பதில் சந்தேகம் இல்லை, அதே வேளையில் வங்கதேச அணியும் சிறந்தது தான், வங்கதேச அணி ஆடுகளத்திற்கு ஏற்றவாறு விளையாடி வெற்றி பெற்றது” என்று தெரிவித்தார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணியும், இலங்கை அணியும் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது. இரு அணிகள் இடையேயான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி செப்டம்பர் 17ம் தேதி நடைபெற உள்ளது.