ரோஹித்தின் சதத்தினால் வங்கதேச அணிக்கு 315 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பையில் 40 ஆவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் இரு அணிகளும் மோதி வருகின்றன. முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.

இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக கே எல் ராகுல் மற்றும் ரோகித் சர்மா களம் இறங்கினர். வங்கதேச அணியின் பந்து வீச்சாளர்களை இந்த ஜோடி வெளுத்து வாங்கி முதல் விக்கெட்டிற்கு 180 ரன்கள் சேர்த்தது. வழக்கமாக நிதானமான ஆட்டத்தை ஆடும் ரோகித் சர்மா இன்று துவக்கம் முதலே அதிரடியில் இறங்கினார். 90 பந்துகளில் சதம் அடித்த ரோகித் சர்மா அதன்பிறகு பெரிய ஸ்கோருக்கு எடுத்துச் செல்வார் என்று இருந்த நிலையில் 92 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதில் 7 பவுண்டரிகளும் 5 சிக்சர்களும் அடங்கும்.

அடுத்து மறுமுனையில் நிதானமாக ஆடி வந்த கேஎல் ராகுல் 92 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு இந்திய அணிக்கு சரியான இடைவெளிகளில் விக்கெட் விழ தொடங்கியது. விராத் கோலி 26, ஹர்திக் பாண்டியா 0, தினேஷ் கார்த்திக் 8 என வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க நடுவரிசையில் இந்திய அணி மீண்டும் தடுமாறியது.
பண்ட் 48 ரன்களுக்கு ஆட்டமிழந்த உலககோப்பையில் முதல் அரை சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர் தோனி 35 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 314 ரன்களை எடுத்தது இந்திய அணி. வங்கதேசம் சார்பில் முஸ்தபிஷூர் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.