செம்ம பார்மில் இருக்கும் வங்கதேசம்! எப்படி வெல்லப்போகிறது இந்தியா?

இங்கிலாந்துடன் முதல் தோல்வியைப் பெற்ற நிலையில் வங்கதேசத்தை வென்று தனது அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யுமா இந்தியா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
6 ஆட்டங்களில் 5 வெற்றிகளை பெற்று, தோல்வியே அடையாத அணியாக இருந்த இந்தியா, ஞாயிற்றுக்கிழமை பர்மிங்ஹாமில் நடைபெற்ற ஆட்டத்தில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது. எனினும் இதனால் புள்ளிகள் பட்டியலில் இந்தியாவின் 2-ஆவது இடத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் அடுத்த வங்கதேசம், இலங்கையுடன் நடைபெறவுள்ள 2 ஆட்டங்களில் ஏதாவது ஒன்றில் வென்றால் அரையிறுதிக்கு தகுதி பெறலாம்.
மெத்தனமான பேட்டிங்: இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய சுழற்பந்து வீச்சு சோடை போனது. அதிக ரன்களை வாரி வழங்கி சாதனை படைத்தனர் குல்தீப்-சஹல் இணை. மேலும் ஸ்கோரை சேஸ் செய்வதில் இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் மெத்தனப் போக்கும் தோல்விக்கு வழிகோலியது. கடைசி 5 ஓவர்களில் வெறும் 39 ரன்களையே தோனி-ஜாதவ் இணை சேர்த்தது கண்டனத்துக்கு ஆளானது.

மேலும் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் அதிக தூரம் பவுண்டரி அடிக்க வாய்ப்பு தரும் வகையில் பந்துவீசி இந்திய பேட்ஸ்மேன்களை சோதனைக்கு உள்ளாக்கினர்.

மேலும் வங்கதேச வீரர்கள் தமிம் இக்பால், ஷகிப், முஷ்பிகுர் ரஹீம், லிட்டன் தாஸ், மமுத்துல்லா ஆகியோர் சுழற்பந்து வீச்சை எளிதாக ஆடுவர் என்ற நிலை உள்ளது. ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் (476 ரன்கள், 10 விக்கெட்டுகள்) அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது அணிக்கு முந்தைய ஆட்டங்களில் வெற்றியை தேடித் தந்துள்ளார். வங்கதேச கேப்டன் மஷ்ரப் மோர்டஸாவின் மோசமான ஆட்டமும் அந்த அணிக்கு பாதிப்பை தருகிறது.
இந்திய அணியில் புவனேஷ்வர்குமார், பும்ரா, ஷமி உள்ளிட்ட மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் முதன்முறையாக இந்த ஆட்டத்தில் களமிறக்கப்படலாம்.
வங்கதேச அணியின் பேட்டிங் போன்று பந்துவீச்சு அவ்வளவு வலிமையாக இல்லை என்பது இந்தியாவுக்கு ஆறுதலைத் தரும். இதனால் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்யவே கேப்டன் கோலி விழைவார்.
அதே நேரத்தில் வங்கதேச அணி அடுத்த 2 ஆட்டங்களில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். மேலும் நியூஸிலாந்து-இங்கிலாந்து ஆட்டத்தின் முடிவைப் பொறுத்தே அரையிறுதிக்கு வங்கதேசத்தின் தகுதி குறித்து தீர்மானிக்க முடியும்.

 

Sathish Kumar:

This website uses cookies.