இப்ப எவனாச்சும் பேசுங்கடா பாப்போம்… நியூசிலாந்தை வதம் செய்து சதம் அடித்த ஹிட்மேன் ரோஹித் சர்மா
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா சதம் அடித்து அசத்தியுள்ளார்.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, நியூசிலாந்து அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றிய நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
இந்தூரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லதாம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு வழக்கம் போல் ரோஹித் சர்மாவும், சுப்மன் கில்லும் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.
போட்டியின் முதல் ஓவரில் இருந்தே நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை மிக இலகுவாக எதிர்கொண்ட இந்த ஜோடி மளமளவென ரன்னும் குவித்தது.
நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சிதறடித்து சிக்ஸர் மழை பொழிந்த ரோஹித் சர்மா 83 பந்துகளில் சதமும் அடித்து அசத்தினார். நீண்ட நாட்களுக்கு பிறகு ரோஹித் சர்மா அடிக்கும் சதம் இதுவாகும். அதே போல் ரோஹித் சர்மாவிற்கு ஒருநாள் போட்டிகளில் இது 30வது சதமாகும்.
ரோஹித் சர்மா சதம் அடித்த அடுத்த சில நிமிடங்களில் சுப்மன் கில்லும் சதம் அடித்து அசத்தினார். ரோஹித் சர்மா 85 பந்துகளில் 101 ரன்கள் எடுத்த போதிலும், சுப்மன் கில் 78 பந்துகளில் 112 ரன்கள் எடுத்த போதும் விக்கெட்டை இழந்து வெளியேறினர். இதன் மூலம் போட்டியின் 30 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்துள்ள இந்திய அணி 243 ரன்கள் குவித்துள்ளது.