9 வருட சாதனையை தகர்த்தெறிந்த கே.எல் ராகுல் - மாயன்க் அகர்வால் ஜோடி !! 1

9 வருட சாதனையை தகர்த்தெறிந்த கே.எல் ராகுல் – மாயன்க் அகர்வால் ஜோடி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் பஞ்சாப் அணியின் துவக்க வீரர்கள் கூட்டணியான மாயன்க் அகர்வால் – கே.எல் ராகுல் ஜோடி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதி வருகின்றன.

துபாயின் ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

9 வருட சாதனையை தகர்த்தெறிந்த கே.எல் ராகுல் - மாயன்க் அகர்வால் ஜோடி !! 2

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு வழக்கம் போல கே.எல் ராகுல் மற்றும் மாயன்க் அகர்வால் ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.

போட்டியின் முதல் ஓவரில் இருந்தே ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை பிரித்து மேய்ந்த இந்த ஜோடி மளமளவென ரன் குவித்தது.

ஒரு கட்டத்தில் கே.எல் ராகுல் கூட நிதானமாக விளையாடிய போதிலும், பாரபட்சம் பார்க்காமல் அனைத்து பந்துவீச்சாளர்களின் பந்தையும் நாளாபுறமும் சிதறடித்த மாயன்க் அகர்வால் 26 பந்துகளில் அரைசதமும், 45 பந்துகளில் சதமும் கடந்து மிரள வைத்தார்.

9 வருட சாதனையை தகர்த்தெறிந்த கே.எல் ராகுல் - மாயன்க் அகர்வால் ஜோடி !! 3

போட்டியின் 16வது ஓவர் வரை நிலைத்து நின்று விளையாடிய இந்த ஜோடி 183 ரன்கள் குவித்தது. முதல் விக்கெட்டுக்கு 183 ரன்கள் குவித்ததன் மூலம், பஞ்சாப் அணிக்காக ஒரே இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்து கொடுத்த துவக்க வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளனர். முன்னதாக கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற தொடரில் பஞ்சாப் அணியின் துவக்க வீரர்களான ஆடம் கில்கிறிஸ்ட் – பவுல் வால்தட்டி கூட்டணி 136 ரன்கள் எடுத்திருந்தனர், தற்பொது இதனை முறியடித்து கே.எல் ராகுல் – மாயன்க் அகர்வால் ஜோடி முதலிடத்தை பிடித்துள்ளது.

இமாலய இலக்கு;

மாயன்க் அகர்வால் வெளியேறிய அடுத்த சில நிமிடங்களில் கே.எல் ராகுலும் (69 ரன்கள்) விக்கெட்டை இழந்து வெளியேறினாலும், அடுத்ததாக களமிறங்கிய மேக்ஸ்வெல் 9 பந்தில் 13 ரன்களும், நிக்கோலஸ் பூரன் 8 பந்தில் 3 சிக்ஸர்களுடன் 25 ரன்களும் எடுத்து கைகொடுத்தன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் வெறும் இரண்டு விக்கெட்டை மட்டுமே இழந்துள்ள பஞ்சாப் அணி 223 ரன்கள் குவித்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *