மும்பை எங்களுக்கு மேட்டரே இல்ல… இந்த ஒரு டீம பார்த்து தான் நாங்க பயந்தோம்; உண்மையை ஒப்புக்கொண்ட அம்பத்தி ராயுடு
ஐபிஎல் தொடரின் இறுதி போட்டிக்கு குஜராத் அணி தகுதி பெற்றுவிட கூடாது என விரும்பியதாக சென்னை அணியின் நட்சத்திர வீரரான அம்பத்தி ராயூடு தெரிவித்துள்ளார்.
16வது ஐபிஎல் தொடரில், குஜராத் அணியுடனான முதல் போட்டியிலேயே தோல்வியடைந்து, தோல்வியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடரை துவங்கியது.
பந்துவீச்சில் போதிய பலம் இல்லாத சென்னை அணியால் இந்த முறை ப்ளே ஆஃப் சுற்றுக்கே தகுதி பெற முடியாது என்பதே பல கிரிக்கெட் வல்லுநர்களின் கருத்தாக இருந்தது. ஆனால் இரண்டாவது அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய சென்னை அணி, முதல் அணியாக இறுதி போட்டிக்கும் தகுதி பெற்றது.
இறுதி போட்டியில் குஜராத் அணியை எதிர்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வழக்கம் போல் பந்துவீச்சு, பீல்டிங்கில் கடுமையாக சொதப்பினாலும், ஜடேஜா, கான்வே, கெய்க்வாட் போன்ற வீரர்களின் நம்பிக்கையான பேட்டிங்கால், கடைசி பந்து வரை பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 5வது முறையாக ஐபிஎல் தொடரின் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது.
இந்தநிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்த வெற்றி குறித்து பல்வேறு விசயங்கள் பேசிய சென்னை அணியின் நட்சத்திர வீரரான அம்பத்தி ராயுடு, குஜராத் அணி இறுதி போட்டிக்கு வந்துவிட கூடாது என்றே விரும்பியதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அம்பத்தி ராயுடு பேசுகையில், “உண்மையை சொல்ல வேண்டுமெனில் இறுதி போட்டியில் குஜராத் அணியை மீண்டும் சந்திக்கும் நிலை ஏற்பட கூடாது என்றே நாங்கள் விரும்பினோம். மற்ற அணிகளை விட குஜராத் அணி அதிக ஆபத்தானது. குஜராத் அணியை வீழ்த்துவது மிக கடினம், குறிப்பாக குஜராத் அணியின் பந்துவீச்சு அசுர பலம் கொண்டது, அவர்களை எதிர்கொள்வது சாதரண விசயம் கிடையாது. எனவே தான் குஜராத் அணியை இறுதி போட்டியில் எதிர்கொள்ள நிலை வர கூடாது என விரும்பினோம்” என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அம்பத்தி ராயூடு, இறுதி போட்டி நிறைவடைந்த பிறகு தோனி, என்னையும், ஜடேஜாவையும் அழைத்து, நீங்கள் இருவரும் தான் ஐபிஎல் கோப்பையை வாங்க வேண்டும் என கூறினார். அதை என்னால் நம்பவே முடியவில்லை. தோனி எப்பொழுதுமே அணியில் இருக்கும் அனைவரை பற்றியும் சிந்திக்க கூடியவர். தோனியை போன்ற பெருந்தன்மையுடன் வேறு யாராலும் இருக்க முடியாது” என்று தெரிவித்தார்.