கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் இறுதி வரை விக்கெட் இழக்காமல் 210 ரன்களும் குவித்ததன் மூலம், லக்னோ அணியின் துவக்க வீரர்களான கே.எல் ராகுல் மற்றும் டி காக் ஐபிஎல் தொடரில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராகியுள்ளனர்.
15வது ஐபிஎல் தொடரின் 66வது லீக் போட்டியான இன்றைய போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ அணியும், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி வருகின்றன.
மும்பை பட்டீல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல் ராகுல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய லக்னோ அணிக்கு வழக்கம் போல் கே.எல் ராகுலும், டி காக்கும் துவக்க வீரர்களாக களமிறங்கினர். போட்டியின் முதல் ஓவரில் இருந்தே கொல்கத்தா அணியின் பந்துவீச்சை அசால்டாக எதிர்கொண்ட இந்த கூட்டணி, மளமளவென ரன்னும் குவித்தது.
கே.எல் ராகுலை பொறுமையாக விளையாடவிட்டுவிட்டு மறுபுறம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய டி.காக் 59 பந்துகளில் சதம் அடித்துவிட்டு, கடைசி 11 பந்துகளில் 40 ரன்கள் குவித்து மொத்தம் 70 பந்துகளில் 10 சிக்ஸர் மற்றும் 10 பவுண்டரிகளுடன் 140 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் லக்னோ அணி 210 ரன்கள் குவித்துள்ளது.
இந்தநிலையில், இந்த போட்டியில் விக்கெட்டே இழக்காமல் 210 ரன்கள் குவித்ததன் மூலம், லக்னோ அணியின் துவக்க வீரர்களான டி காக் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர்களாகியுள்ளனர்.
✅ Highest opening partnership in IPL history
✅ First pair to bat 20 overs in an IPL innings
✅ The highest individual score of #IPL2022Just wow! 🤯
— ESPNcricinfo (@ESPNcricinfo) May 18, 2022
ஐபிஎல் வரலாற்றில் துவக்க வீரர்கள் குவித்த அதிகபட்ச ரன் இதுவாகும். இதற்கு முன் ஜானி பாரிஸ்டோ – வார்னர் கூட்டணி 185 ரன்கள் குவித்திருந்ததே முதல் இடத்தில் இருந்தது, தற்போது இதனை கே.எல் ராகுல் – டி காக் ஜோடி முறியடித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் ஒரு இன்னிங்ஸில் 20 ஓவர்களும் விளையாடிய முதல் ஜோடியும் கே.எல் ராகுல் – டி காக் கூட்டணி தான்.