இலங்கை அணியின் இளம் வீரர் அவிஷ்கா பெர்னாண்டோ வரலாற்று சிறப்புமிக்க சாதனை ஒன்றை உலகக்கோப்பையில் நிகழ்த்தி இலங்கை அணியின் வெற்றிக்கும் உதவியுள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரின் 39 வது லீக் போட்டியில் இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இரு அணிகளும் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதில் முதலில் பேட்டிங் செய்தது.
இலங்கை அணியின் துவக்க ஆட்டக்காரர் கருணாரத்னே 16வது ஓவரில் ஆட்டமிழக்க அடுத்ததாக களமிறங்கினார் 21 வயது இளம் வீரர் அவிஷ்கா பெர்ணான்டோ. 2 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடிய அனுபவம் கொண்ட இவருக்கு உலக கோப்பையில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. உலககோப்பையில் நல்ல துவக்கம் கிடைத்தும் இவரால் பெரிய ஸ்கோருக்கு எடுத்துச்செல்ல முடியவில்லை.
இந்நிலையில் இன்றைய போட்டியில் சிறப்பாக ஆடிய அவிஸ்கா பெர்னாண்டோ சர்வதேச ஒருநாள் அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். நடைபெற்று வரும் உலக கோப்பை தொடரில் இலங்கை அணியின் முதல் சதம் இது. கேப்டன் கருணரத்னே துரசதிஷ்டவசமாக ஆஸ்திரேலியா அணியுடன் 97 ரன்னில் அவுட் ஆனதே அதிகமாக இருந்தது.
அவிஸ்கா இலங்கை அணிக்காக உலக கோப்பை தொடர்களில் குறைந்த வயதில் சதம் அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார். இவர் 21 வயது 87 நாட்களில் இச்சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.
சர்வதேச அரங்கில் உலகக் கோப்பை தொடரில் குறைந்த வயதில் சதம் அடித்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார் பெர்னாண்டோ.
உலக கோப்பையில் குறைந்த வயதில் சதமடித்த வீரர்களின் பட்டியல்
1. பால் ஸ்டர்லிங் – அயர்லாந்து – 20 வயது 196 நாட்கள்
2. ரிக்கி பாண்டிங் -ஆஸ்திரேலியா – 21 வயது 76 நாட்கள்
3. அவிஸ்கா பெர்னாண்டோ – இலங்கை – 21 வயது 87 நாட்கள்
நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் இந்திய அணியின் விராட் கோலி மற்றும் சச்சின் டெண்டுல்கர் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.