உலக கோப்பை தொடரின் 40 ஆவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் இரு அணிகளும் மோதுகின்றன.
முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளார்.
பிர்மிங்காம் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் இரு அணிகளும் முழு முனைப்புடன் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பங்களாதேஷ் அணிக்கு அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள இப்போட்டியில் வெற்றி கட்டாயம் தேவை. அதேபோல், இந்திய அணி இப்போட்டியை வென்றால் 13 புள்ளிகளுடன் அரையிறுதிக்குள் நுழையும் இரண்டாம் அணியாக இருக்கும்.

வங்கதேச அணிக்கு உலகின் நம்பர் ஒன் ஆல்ரவுண்டர் சகிப் அல் ஹசன் மற்றும் விக்கெட் கீப்பர் ரஹிம் இருவரும் பேட்டிங்கில் பலம் சேர்கிறார். 6 இன்னிங்சில் சகிப் அல் ஹசன் 476 ரன்கள் குவித்ததோடு, பந்துவீச்சிலும் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ரஹிம் 6 இன்னிங்சில் 327 ரன்கள் அடித்துள்ளார். அனுபவ துவக்க வீரர் தமீம் இக்பால் சற்று தடுமாறி வருவதால், இதுவரை நல்ல துவக்கம் அந்த அணிக்கு அமையவில்லை. பந்துவீச்சில் கூடுதல் கவனம் தேவை.
இந்திய அணிக்கு பேட்டிங்கில் கேப்டன் கோலி மற்றும் துணை கேப்டன் ரோஹித் சர்மா இருவரும் அபாரமாக ஆடி வருகின்றனர். பந்துவீச்சில் ஒருபுறம் முகமது சமி விக்கெட்டுகளை வீழ்த்தி வருகையில், மறுபக்கம் பும்ரா ரன்களை கட்டுப்படுத்துகிறார். இந்திய அணிக்கு நடுவரிசை பேட்டிங்கில் கவனம் தேவை.

இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. குலதீப் வெளியில் அமர்த்தப்பட்டு அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் அணியில் இணைகிறார். மேலும், தடுமாறி வந்த கேதர் ஜாதவ் வெளியில் அமர்த்தப்பட்டு இந்த தொடரில் முதல் முறையாக தினேஷ் கார்த்திக் களமிறங்குகிறார்.
இன்றைய போட்டியில் ஆடும் இந்திய அணி வீரர்கள்
லோகேஷ் ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), ரிஷாப் பந்த், தினேஷ் கார்த்திக், எம்.எஸ்.தோனி (கீப்பர்), ஹார்திக் பாண்டடியா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரீத் பும்ரா
இன்றைய போட்டியில் ஆடும் வங்கதேச அணி வீரர்கள்
தமீம் இக்பால், சவுமியா சர்க்கார், ஷாகிப் அல் ஹசன், முஷ்பிகூர் ரஹீம் (கீப்பர்), லிட்டன் தாஸ், மொசாடெக் ஹொசைன், சப்பீர் ரஹ்மான், முகமது சைபுதீன், மஷ்ரஃப் மோர்டாசா (கேப்டன்), ரூபல் ஹொசைன், முஸ்தாபிஸூர்