தனது குழந்தை மற்றும் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடராஜன் !
2020 ஐபிஎல் தொடரில் கலக்கிய தமிழகத்தைச் சேர்ந்த தங்கராசு நடராஜன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சுற்றுப்பயணத்திலும் சிறப்பாக விளையாடினார். கடந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக களமிறங்கிய இவர் 16 போட்டிகளில் பங்கு பெற்றார். இதில் இவர் தனது யார்க்கர் பந்துவீச்சின் மூலம் 16 விக்கெட்களை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்திருந்தார். இதன் மூலம் நடராஜன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக தேர்வு செய்யப்பட்டார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் தொடரில் தமிழக வீர நடராஜன் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட நடராஜன் தனது முதல் சர்வதேச ஆட்டத்திலேயே 2 விக்கெட்களை பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இதன் மூலம் டி20 தொடரிலும் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. இந்த டி20 தொடரில் ஆஸ்திரேலிய ஜாம்பவான்களின் விக்கெட்களை பெற்று இந்திய அணி வெற்றிபெற முக்கிய காரணமாக அமைந்திருந்தார் நடராஜன்.
ஆஸ்திரேலிய டி20 தொடரில் 3 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் மொத்தம் 6 விக்கெட்களை பெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்ததால் டெஸ்ட் போட்டிக்கான வலைப்பயிற்சி பந்துவீச்சாளராகவும் தேர்வு செய்யப்பட்டார். பிரிஸ்பேனில் நடைபெற்ற இறுதி டெஸ்ட் போட்டியில் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது நடராஜன் சிறப்பாக பந்து வீசிய 3 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.

தற்போது நடராஜன் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையே வைத்திருக்கிறார். ஆஸ்திரேலிய தொடரை முடித்துவிட்டு நாடு திரும்பிய நடராஜனை அவரது ஊர் பொதுமக்கள் வெறித்தனமாக வரவேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடராஜன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இந்தப் புகைப்படத்தில் நடராஜன் தனது மனைவி மற்றும் 4 மாத குழந்தையுடன் இருக்கிறார்.
நடராஜன் அதில் “எங்கள் சிறிய தேவதை ஹன்விகா. நீ எங்கள் வாழ்க்கையின் மிக அழகான பரிசு. எங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதற்கு நீ தான் காரணம். நீ எங்களை பெற்றோர்களாக தேர்வு செய்ததற்கு நன்றி. நாங்கள் உன்னை எப்பொழுதும் நேசிப்போம்” என்று நடராஜன் கூறியிருக்கிறார்.