8 மாதம் கழித்து ஒருநாள் போட்டிகளில் ஆடுகிறேன். முழு பங்களிப்பை கொடுத்து வெற்றிக்கு உதவியது பெருமிதமாக இருக்கிறது என்று பேசினார் ரவீந்திர ஜடேஜா.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்சல் மார்ஷ் ஓப்பனிங் செய்தனர். அதிரடியாக ஆரம்பித்து சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளாக விளாசிய மிச்சல் மார்ஷ், 5 சிக்சர்கள் 10 பவுண்டரிகள் உட்பட வெறும் 65 பந்துகளில் 81 ரன்கள் விளாசினார். சரியான நேரத்தில் இவரது விக்கெட்டை ஜடேஜா எடுத்து ஆட்டத்தை இந்திய அணி பக்கம் திருப்பினார்.
ஸ்மித் 22 ரன்கள், இங்கிலிஷ் 26 ரன்கள், கிரீன் 12 ரன்கள்அடித்து, அடுத்தடுத்து அவுட்டாகினர். 128 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த ஆஸ்திரேலியா 300-350 ரன்களை எட்டும் என நினைத்திருந்தபோது, 35.4 ஓவர்களில் 188 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது. சிராஜ் மற்றும் முகமது சமி இருவரும் பந்துவீச்சில் மிரட்டி தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஜடேஜா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
189 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணிக்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இஷான் கிஷன், விராட் கோலி, சூரியகுமார் மற்றும் கில் ஆகியோர் வரிசையாக சொற்பரன்களுக்கு அவுட்டாக, 39 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை தடுமாற்றம் கண்டது இழந்து இந்திய அணி.
ஹர்திக் பாண்டியா கேஎல் ராகுலுடன் ஜோடி சேர, இவர்கள் 5வது விக்கெட்டுக்கு 44 ரன்கள் சேர்த்தனர். தவறான நேரத்தில் 25 ரன்களுக்கு ஹர்திக் பாண்டியா அவுட்டானார். அடுத்து களமிறங்கிய ஜடேஜா கேஎல் ராகுலுடன் ஜோடி சேர்ந்து ஆட்டத்தின் போக்கை இந்தியா பக்கம் திருப்பினார்.
6வது விக்கெட்டுக்கு ஜடேஜா-கேஎல் ராகுல் ஜோடி 108 ரன்கள் சேர்த்து, இறுதிவரை நின்று இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தது. ஜடேஜா 45 ரன்களும், கேஎல் ராகுல் 75 ரன்களும் ஆட்டமிழக்காமல் அடித்திருந்தனர். 39.5 ஓவர்களில் 191 ரன்கள் அடித்த இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
பவுலிங்கில் 2 விக்கெட்டுகள் மற்றும் முக்கியமான கேட்ச், பேட்டிங்கில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 45 ரன்கள் என ஒட்டுமொத்தமாக ஆல்ரவுண்டர் ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜடேஜா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அவர் கூறியதாவது:
“கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்கு பிறகு நான் ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறேன். அதனால் விரைவாக இந்த போட்டிக்கு என்னை தகவமைத்துக் கொண்டு எனது ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்தேன். அதிர்ஷ்டவசமாக பந்துவீச்சில் சில விக்கெட்டுகள் எனக்கு கிடைத்தது. கடந்த சில வாரங்களாக டெஸ்ட் கிரிக்கெட்டுகளை விளையாடினோம். அதற்கும் ஒருநாள் போட்டிக்கும் லைன் மற்றும் லெந்த் முற்றிலும் மாறுபட்டது. ஆகையால் அதை மாற்றிக்கொண்டு பவுலிங் செய்வதற்கு சற்று கடினமாக இருந்தது. நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளாமல் விரைவாக என்னை மாற்றிக் கொண்டு சரியான இடத்தில் பவுலிங் செய்தேன். ஆங்காங்கே எனக்கு டர்ன் கிடைத்தது. அதுவும் எனக்கு உதவியது.
பேட்டிங் செய்ய களமிறங்கியபோது இக்கட்டான சூழல் நிலவியது. கேஎல் ராகுலுடன் பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டும் என்று மட்டுமே எண்ணினேன். இலக்கு மிகவும் குறைவானது தான், ஆனால் இக்கட்டான சூழலில் இதை சேஸ் செய்வது சற்று கடினம். பெரிய ஷாட்கள் இங்கே அடிப்பது எளிதானது அல்ல என்று உணர்ந்தேன். ஏனெனில் பந்து 30 ஓவர்களுக்கும் மேல் ஸ்விங் ஆனது. ஆகையால் நிதானமாக அணுக வேண்டும் என்று முடிவு செய்து, 70-80 ரன்கள் வரை பார்ட்னர்ஷிப் அமைத்தால் போதும். மீதமுள்ள ரன்கள் தானாக வந்துவிடும் என்று எதிர்பார்த்தேன். அதுவே சரியாக நடந்தது. நீண்ட இடைவெளிக்குப்பின் வந்து வெற்றிக்கு பங்களிப்பை கொடுத்தது மகிழ்ச்சியளிக்கிறது.” என்றார் ஜடேஜா.