இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்ததன் மூலம் நீண்ட கால சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார் இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலக கோப்பை தொடரில் இந்திய அணி முதல்முறையாக இங்கிலாந்து அணியிடம் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதுவரை ஆடிய 7 லீக் போட்டிகளில் 5 வெற்றிகள், ஒரு தோல்வி மற்றும் ஒரு போட்டி ரத்து என மொத்தம் 11 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கின்றது.

இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதிய போட்டியில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி. ஜானி பேர்ஸ்டோ மற்றும் ஜேசன் ராய் இருவரின் நல்ல துவக்கமும், நடு வரிசையில் ஸ்டோக்சின் அபாரமான ஆட்டத்தாலும் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு கேஎல் ராகுல் மோசமான துவக்கம் கொடுத்து வெளியேறினார். ரோஹித் சர்மா மற்றும் விராத் கோலி இருவரும் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்தனர். இருவரும் அரைசதம் கண்ட பிறகு, விராட் கோலி 66 ரன்களில் ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா வழக்கம்போல நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். இது ஒரு நாள் அரங்கில் இவரது 25 வது சதம் ஆகும்.

சதம் அடித்த பிறகு ஆட்டத்தில் வேகம் இருக்கும் என எதிர்பார்த்த நிலையில், திடீரென அவுட்டாகி வெளியேறி அதிர்ச்சி அளித்தார். அதன்பிறகு ரிஷப் பண்ட், பாண்டியா மற்றும் தோனி ஆகியோர் முயற்சி செய்தும் இலக்கை எட்ட முடியவில்லை. இறுதியில் தோல்வியை தழுவியது.
இப்போட்டியில் ரோகித் சர்மா சதம் அடித்ததன் மூலம் ஒருநாள் அரங்கில் அதிவேகமாக 25 சதங்களை பூர்த்தி செய்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெற்றார். இவர் இதனை 206 இன்னிங்ஸ்களில் நிகழ்த்தியுள்ளார்.

அதிவிரைவாக ஒருநாள் போட்டியில் 25 சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியல்
1. ஹசிம் அம்லா – 151 போட்டிகள்
2. விராத் கோலி – 162 போட்டிகள்
3. ரோஹித் சர்மா – 206 போட்டிகள்
4. ஏபி டி வில்லியர்ஸ் – 214 போட்டிகள்
5. சச்சின் டெண்டுல்கர் – 234 போட்டிகள்