விஜய் ஹசாரே தொடரின் காலிறுதி போட்டியில் இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார் இளம் துவக்க வீரர் ருத்துராஜ் கெய்க்வாட்.
2022 ஆம் ஆண்டுக்கான விஜய் ஹசாரே தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் காலிறுதி சுற்றுக்கு எட்டு அணிகள் தேர்வு பெற்றது.
இரண்டாவது காலிறுதியில் மகாராஷ்டிரா மற்றும் உத்திரபிரதேசம் ஆகிய இரு அணிகளும் பலப்பரீட்சை மேற்கொண்டு வருகின்றன. உத்தரபிரதேச அணியின் கேப்டன் டாஸ் வென்று பவுலிங் செய்தார்.
முதலில் பேட்டிங் செய்வதற்கு மகாராஷ்டிரா அணியின் கேப்டன் ருத்துராஜ் மற்றும் ராகுல் திரிப்பாதி இருவரும் களம் கண்டனர். நல்ல பார்மில் இருந்த ராகுல் திரிப்பாதி இம்முறை 9 ரன்கள் மட்டும் எடுத்து அவுட் ஆகினார். அடுத்து வந்த வீரரும் 11 ரன்களுக்கு அவுட் ஆனார்.
மிடில் ஓவர்களில் சிறிது நேரம் நிலைத்து ஆடி பார்ட்னர்ஷிப் அமைத்த அசிம் காசி 37 ரன்களும் அதற்கு முன்னர் களமிறங்கிய பாவ்னே 37 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர்.
ஆனால் இறுதிவரை நிலைத்து ஆடிய ருத்துராஜ் கெய்க்வாட் 150 ரன்கள் கடந்த பிறகு அசுர வேகத்தில் இரட்டை சதம் அடித்தார். குறிப்பாக 49வது ஓவரில் நோபல் சிக்ஸ் உட்பட ஏழு சிக்ஸர்கள் அடித்து ஒரே ஓவரில் 43 ரன்களை எடுத்த வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார்.
முதல் ஆளாக களமிறங்கி கடைசி பந்துவரை ஆட்டம் இழக்காமல் களத்திலேயே இருந்த ருத்துராஜ் கெய்க்வாட் பத்து பவுண்டரிகள் 16 சிக்ஸர்கள் உட்பட 159 பந்துகளில் 220 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்துவதற்கு உதவினார்.
மகாராஷ்டிரா அணி 50 ஓவர்கள் முடிவில் 330 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. 331 ரன்கள் எடுத்தால் அரையிருதிக்குள் நுழையலாம் என களமிறங்கியுள்ளது உத்தரபிரதேசம்.
மிகச் சிறப்பான ஃபார்மில் இருக்கும் இவரை நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் வங்கதேசம் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர் இரண்டிலும் ஏன் எடுக்கவில்லை? என்று தற்போது பிசிசிஐ மீது பல கேள்விகளை முன் வைத்து வருகின்றனர் இந்திய ரசிகர்கள்.
நியூசிலாந்து தொடரில் முன்னணி வீரர்கள் இல்லாத போது, இவரை விளையாடவைத்து கூடுதல் அனுபவத்தை பெற வைக்கலாம். ஆனால் பிசிசிஐ எதன் அடிப்படையில் இவரை எடுக்கவில்லை? என்ற கேள்விகளும் வருகின்றன.