டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் குறித்து சுவாரஸ்சியமான தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.
2021ம் ஆண்டு நடைபெற இருக்கும் 14வது ஐபிஎல் சீசன் ஏப்ரல்/மே மாதம் நடத்துவதற்கு பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. எனவே இந்த 14வது ஐபிஎல் சீசனுக்காக அனைத்து அணிகளும் தற்போது தீவிரமாக தயாராகி வருகின்றனர். ஐபிஎல் போட்டி நடைபெறும் தேதி மற்றும் இடம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. பிசிசிஐ தலைவர் கங்குலி இதற்கான முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம் கடந்த பிப்ரவரி மாதம் 18ம் தேதி நடைபெற்றது.இந்த மினி ஏலத்தில் கிறிஸ் மோரிஸ் -16.25 கோடி, கைல் ஜாமிசன் – 15 கோடி, மேஸ்வெல் – 15 கோடி, ஜெய் ரிச்சர்ட்ஸன் – 14 கோடி, கிருஷ்ணப்ப கவுதம் – 9.25 கோடி, மெரிடித் – 8 கோடி ஆகியோர் அதிக விலைக்கு எடுக்கப்பட்டார்கள்.
இந்த ஐபிஎல் ஏலத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஸ்டீவ் ஸ்மித், டாம் கரான், சாம் பில்லிங்ஸ், உமேஷ் யாதவ், லுக்மன் மேரிவாலா, ரிபால் படேல், விஷ்ணு வினோத் மற்றும் மணிமாறன் சித்தார்த் உள்ளிட்ட 8 வீரர்களை தேர்வு செய்திருக்கின்றனர்.

கடந்த சீசனில் அதிரடியாக விளையாடிய டெல்லி அணி இம்முறை இவர்களை தேர்வு செய்து வலிமைமிக்க அணியாக உருவெடுத்திருக்கிறது. இந்நிலையில் டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஸ்மித் மற்றும் டாம் கரனின் அனுபவம் டெல்லி அணிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். மேலும் பேசிய ஸ்ரேயாஸ் எங்களது அணி வலிமைமிக்க அணியாக இந்த சீசனில் திகழும்.
எங்களுக்கு இந்த சீசன் சிறப்பானதாக அமையும். அனைத்து சவால்களையும் எங்கள் அணி எளிதாக எதிர்கொள்ளும் என்ற நம்பிக்கை இருக்கிறது. எங்களுக்கு ஆதரவாக ரசிகர்கள் இருக்கிறார்கள். மேலும் அவர்கள் எங்களை ஊக்குவிப்பார்கள். இந்த சீசனில் வெற்றி பெற்று ரசிகர்களுடன் இணைந்து கொண்டாட தயாராக இருக்கிறோம்” என்று ஸ்ரேயாஸ் கூறியிருக்கிறார்.
