தென்னாப்பிரிக்க தொடர் எளிதானது அல்ல, சவால் நிறைந்து இருக்கும் என்று முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையுடன் தற்போது விளையாடி வருகிறது. டெஸ்ட், ஒருநாள் தொடர் முடிந்த நிலையில் 20 ஓவர் தொடர் இன்று தொடங்குகிறது. இலங்கையுடனான 20 ஓவர் தொடர் வருகிற 24-ந்தேதி முடிகிறது.
இந்த தொடர் முடிந்த பிறகு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 6 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவரில் விளையாடுகிறது. வருகிற 5-ந்தேதி கேப்டவுனில் டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.
இந்த நிலையில் தென்னாப்பிரிக்க தொடர் எளிதானது அல்ல, சவால் நிறைந்து இருக்கும் என்று முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

இந்திய அணி பயிற்சி ஆட்டம் எதிலும் விளையாடாமல் நேரடியாக வேகப்பந்து வீச்சுக்கு ஏற்ற தென்னாப்பிரிக்கா ஆடுகளத்தில் ஆடுகிறது. இதனால் இந்த டெஸ்ட் தொடர் நிச்சயமாக எளிதாக இருக்காது. மிகவும் கடினமாக இருக்கும். இதை என்னால் உறுதியாக கூற முடியும்.

அதே நேரத்தில் இந்திய அணி தற்போது நல்ல நிலையில் இருக்கிறது. பேட்ஸ்மேன்கள் அதிக ரன்களை குவிக்க முடிந்தால் பந்துவீச்சாளர்களால் நிச்சயமாக விக்கெட்டுகளை வீழ்த்த இயலும். அவர்கள் திறமையானவர்களே.

விராட் கோலி, ரகானே, புஜாரா, முரளி விஜய் ஆகியோருக்கு ஏற்கனவே தென்னாப்பிரிக்காவில் விளையாடிய அனுபவம் இருக்கிறது. மேலும் இவர்கள் தற்போது மிகுந்த முன்னேற்றம் அடைந்த பேட்ஸ்மேன்களாக தென்னாப்பிரிக்கா செல்கிறார்கள்.
இந்திய அணியின் வேகப்பந்து தற்போது சிறப்பாக இருக்கிறது. ஆனால் வெளிநாட்டு மண்ணில் அபாரமாக வீசுவதற்கு தயாரான நிலையில் இல்லை.
இவ்வாறு கங்குலி கூறியுள்ளார்.