ஸ்டீவ் ஸ்மித் இல்லையென்றால் ஸ்டோக்ஸ் தான் கேப்டன் ; ராஜஸ்தான் அணி
ஸ்டீம் ஸ்மித் இல்லாத போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஸ்டோக்ஸ் வழிநடத்துவார் என்று ராஜஸ்தான் ராயல் அணி அறிவித்துள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் மிகப்பிரமாண்டமாக நடைபெறும் ஐ.பி.எல் டி.20 தொடர் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி துவங்க உள்ளது.
சூதாட்ட புகாரில் சிக்கியதால் ஐ.பி.எல் டி.20 தொடரில் இருந்து இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த வருடம் மீண்டும் ரீ எண்ட்ரீ கொடுக்கிறது.
இதில் குறிப்பாக தமிழகத்தின் செல்ல பிள்ளையான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரீ எண்ட்ரீ கொடுக்க இருப்பதால் மற்ற ஐ.பி.எல் தொடர்களை விட இந்த தொடருக்கு ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.
இதில் ஓவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்க வைத்து கொண்ட நிலையில், மற்ற வீரர்களுக்கான ஏலம் பெங்களூரில் நடைபெற்றது.
இந்த ஏலத்தில் அதிகபட்சமாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான பென் ஸ்டோக்ஸை 12.5 கோடி ரூபாய் கொடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இது தவிர உனாட்கட், ரஹானே போன்ற முன்னணி வீரர்கள் பலரையும் தனது அணியில் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனான ஸ்டீவ் ஸ்மித் தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வழிநடத்துவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருவேளை ஸ்மித் சில போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போனால் அவருக்கு பதிலாக ஸ்டோக்ஸ் அணியை வழிநடத்துவார் என்று ராஜஸ்தான் ராயல் அணி அறிவித்துள்ளது.

இவருக்கு உறுதுணையாக இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டனான ரஹானேவும் இருப்பார் என்றும் ராஜஸ்தான் அணி அறிவித்துள்ளது.
ஐ.பி.எல் 2018ம் ஆண்டிற்கான ராஜஸ்தான் அணி;
ஸ்டீவ் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், அஜிக்னியா ரஹானே, ஸ்டூவர்ட் பின்னி, பட்லர், சஞ்சு சாம்சன், ராகுல் த்ரிபதி, டி ஆர்கி ஷாட், ஜோஃப்ரா ஆர்சர், கவுதம் கிருஷ்ணப்பா, தாவல் குல்கர்னே, ஜெயதேவ் உனாட்கட், அன்கித் சர்மா