சர்வதேச டி.20 போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி., இன்று வெளியிட்டுள்ளது.
பல வருடமாக தொடர்ந்து ஐபிஎல் தொடரில் மிக சிறப்பாக விளையாடியதன் மூலம், கடந்த வருடம் இந்திய அணியிலும் இடம்பிடித்த சூர்யகுமார் யாதவ், தனது நேர்த்தியான ஆட்டத்தின் மூலம் வெகு விரைவாகவே இந்திய அணியில் தனக்கான இடத்தை கெட்டியாக பிடித்து கொண்டார்.
இந்திய அணிக்கான தனது பங்களிப்பை குறையே சொல்ல முடியாத அளவிற்கு செய்து கொடுத்து வரும் சூர்யகுமார் யாதவ், விண்டீஸ் அணிக்கு எதிரான நடப்பு டி.20 தொடரில் துவக்க வீரராக களமிறங்கி வருகிறார். மிடில் ஆர்டரில் களமிறங்குபவரான சூர்யகுமார் யாதவிற்கு, துவக்க வீரராக களமிறங்குவது செட்டாகது இது அவரது கிரிக்கெட் வாழ்க்கையையே அழித்துவிடும் என முன்னாள் வீரர்கள் பலர் பேசிய நிலையில், சூர்யகுமார் யாதவோ மூன்றாவது போட்டியில் அரைசதம் அடித்து அசத்தினார்.
இந்தநிலையில், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதற்கு கிடைத்த பரிசாக, சர்வதேச டி.20 போட்டிகளில் சிறந்து விளங்கும் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் சூர்யகுமார் யாதவ் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஏறத்தாழ இதுவரை 20 சர்வதேச டி.20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள சூர்யகுமார் யாதவ், வெகு விரைவாக இந்த உச்சத்தை தொட்டுள்ளார்.
சர்வதேச டி.20 போட்டிகளில் சிறந்து விளங்கும் பேட்ஸ்மேன்களுக்கான புதிய தரவரிசையில் சூர்யகுமார் யாதவை தவிர மற்ற இந்திய வீரர்கள் யாரும் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெறவில்லை. இஷான் கிஷன் 14வது இடத்திலும், ரோஹித் சர்மா 16வது இடத்திலும், கே.எல் ராகுல் 20வது இடத்திலும் உள்ளனர். முன்னாள் கேப்டனான விராட் கோலி 28வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். பாகிஸ்தான் அணியின் பாபர் அசாமே தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலிய அணியின் ஹசில்வுட் முதல் இடத்திலும், தென் ஆப்ரிக்கா அணியின் தப்ரைஸ் ஷம்சி இரண்டாவது இடத்திலும், ஆஃப்கானிஸ்தான் அணியின் ரசீத் கான் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.