தனது முதல் சர்வதேச விக்கெட்டை வீழ்த்திய தமிழகத்தின் தங்கம் தங்கராசு நடராஜனுக்கு ட்விட்டரில் பொழியும் வாழ்த்து மழை !
சேலத்தைச் சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் தங்கராசு நடராஜன் இந்திய அணிக்காக முதல் சர்வதேச போட்டியில் அறிமுகம் ஆகிவிட்டார். 13வது ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடியவர் நடராஜன். இந்த வருட ஐபிஎல் தொடரில் 16 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
ஹைதராபாத் அணியில் இருந்த அனுபவம் வாய்ந்த பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் காயமாகி தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேறிய நிலையில் அந்த இடத்தை கனகச்சிதமாக பிடித்துக்கொண்டு பந்துவீச்சை மிகச் சிறப்பாக வழி நடத்தியவர் தங்கராசு நடராஜன். 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடிய நடராஜனின் திறமையைப் பார்த்த பஞ்சாப் அணி அவரை 3 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.ஆனால் அவர் ஒரு போட்டியில் கூட ஆடவில்லை.

அதற்கு அடுத்த வருடம் இரண்டு போட்டிகளில் ஆடினார். அதனைத் தொடர்ந்தே இந்த முறை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அவரை விலைக்கு வாங்கிக் கொண்டது. அவரது திறமையை பார்த்து அவருக்கு தொடர்ந்து போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட நடராஜன் மகேந்திர சிங் தோனி, விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ் போன்ற ஜாம்பவான் வீரர்களின் விக்கெட்டுகளை எடுத்து, கிரிக்கெட் உலகை தன் பக்கம் திருப்பினார்.
உடனடியாக இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று அனைவரும் கோரிக்கை வைத்தனர். அதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெறப்போகும் டி20, ஒருநாள் அணியிலும் பல்வேறு சிக்கல்களுக்கு இடையில் இடம்பிடித்தார். ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இவருக்கு வாய்ப்பு கொடுக்கப் படவில்லை. எதிர்பார்த்தது போல் மூன்றாவது ஒருநாள் போட்டியில் நடராஜன் இடம் பெற்றார்.

நடராஜன், தனது முதல் போட்டியிலேயே ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் மார்னஸ் லாபுசாக்னேவின் விக்கெட்டை வீழ்த்தினார். இதனை தொடர்ந்து தமிழகத்தில் இருந்து உள்ளூர் வீரர் ஒருவர் முதன்முதலாக தேர்வாகி இருக்கிறார். அதிலும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தாண்டி ஊர் பகுதியிலிருந்து முதன்முதலில் தேர்வான வீரர் நடராஜன். இதனை வைத்து தமிழக ட்விட்டர்வாசிகள் அவரை கொண்டாடி வருகின்றனர்.