உங்களுக்கு எல்லாம் என்ன தாண்டா பிரச்சனை…? பதிலடி கொடுத்துள்ளார் அஸ்வின் !! 1

அகமதாபாத் மைதானத்தை விமர்சித்து வருபவர்களுக்கு இந்திய வீரர் ரவிச்சந்திர அஸ்வின் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி, இந்திய அணியை மிக இலகுவாக வீழ்த்தி அபார வெற்றி பெற்றதால், இந்திய அணி இந்த தொடரில் ஒரு போட்டி வெல்வதே மிக கடினம் என எதிர்பார்க்கப்பட்டது.

இதில் குறிப்பாக முதல் போட்டி நடைபெற்ற அதே சேப்பாக்கம் மைதானத்திலேயே இரண்டாவது போட்டியும் நடைபெற்றதால், இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அணியே வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முன்னாள் வீரர்கள் பலரின் கணிப்புகளை தவிடு பொடியாக்கிய இந்திய அணி,இரண்டாவது போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மிகப்பெரும் வெற்றியை பதிவு செய்தது.

உங்களுக்கு எல்லாம் என்ன தாண்டா பிரச்சனை…? பதிலடி கொடுத்துள்ளார் அஸ்வின் !! 2

இதனையடுத்து அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டி வெறும் இரண்டே நாளில் நிறைவடைந்துவிட்டதால் இந்த போட்டியும், இந்த போட்டி நடைபெற்ற ஆடுகளமும் மிகப்பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியது. இது போன்ற ஆடுகளங்கள் டெஸ்ட் போட்டிகளையே அழித்துவிடும் என்று யுவராஜ் சிங் உள்பட முன்னாள் வீரர்கள் பலரே கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

அகமதாபாத் பிட்ச் குறித்து ஆளாளுக்கு ஒரு கருத்து தெரிவித்து வரும் நிலையில், இந்திய வீரரான அஸ்வின் பிட்ச்சை விமர்சிப்பவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளது.

இது குறித்து செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அஸ்வின் பதிலளிக்கையில், “ நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன், நல்ல பிட்ச் என்றால் என்ன? அதற்கு ஏதேனும் விதிமுறைகள் இருக்கிறதா? கிரிக்கெட் என்றாலே பாலுக்கும் பேட்டுக்கும் நடக்கும் போட்டிதான். பவுலர்களுக்கும் போட்டியை வென்றாக வேண்டும், பேட்ஸ்மேன்களுக்கு திறமையாக வென்று ரன்களை சேர்க்க வேண்டும். அதில் எந்த சந்தேகமும் இல்லை” என்றார்.

உங்களுக்கு எல்லாம் என்ன தாண்டா பிரச்சனை…? பதிலடி கொடுத்துள்ளார் அஸ்வின் !! 3

மேலும் பேசிய அவர் “ஆனால் நல்ல பிட்ச் என்றால் என்ன? யார் இதனை தீர்மானிக்கிறார்கள்? டெஸ்ட் போட்டியின் முதல் 2 நாள்கள் வேகப்பந்துவீச்சாளர்களுக்கும் அடுத்த மூன்று நாள்கள் சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் சாதகமாக இருக்க வேண்டுமா? அட என்ன இது? இந்த விதிமுறைகள் எல்லாம் யார் கொண்டு வந்தார்கள், இப்போது அதையெல்லாம் தாண்டி நாம் செல்ல வேண்டும். இருக்கின்ற ஆடுகளத்தில் எப்படி விளையாட வேண்டும் என்பது குறித்துதான் யோசிக்க வேண்டும். எனக்கு தெரிந்து இதில் இங்கிலாந்து வீரர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்றே தோன்றுகிறது ” என்றார் அஸ்வின்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *