இது தோனியின் இயல்பான ஆட்டம் போல தெரியவில்லை. அவரிடம் சில அசவுரியங்கள் தென்பட்டது என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டி முடிந்த பிறகு கருத்து தெரிவித்திருக்கிறார் மேத்தியூ ஹேடன்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 175 ரன்கள் அடித்தது. இந்த இலக்கை சேஸ் செய்த சிஎஸ்கே அணிக்கு கடைசி மூன்று ஓவர்களில் 54 ரன்கள் தேவைப்பட்டபோது, தோனி மற்றும் ஜடேஜா இருவரும் ஜோடி சேர்ந்து கிட்டத்தட்ட இலக்கை நெருங்கும் அளவிற்கு எடுத்துச் சென்றனர்.
கடைசி ஓவரில் 21 ரன்கள் அடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பேட்டிங்கில் இருந்த தோனி இரண்டு சிக்ஸர்கள் அடித்து மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்தார். கடைசியில் பவுலர் சந்தீப் சர்மா சுதாரித்துக் கொண்டதால் சிஎஸ்கே அணியால் இலக்கை எட்டமுடியவில்லை. இதனால் சிஎஸ்கே அணி மூன்று ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் இந்த போட்டி குறித்து சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் சில கருத்துக்களை தெரிவித்ததோடு தோனியிடம் வழக்கமாக இருப்பதை விட சில பிரச்சினைகளை பார்த்ததாகவும் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தோனி குறித்து ஹேடன் பேசியதாவது:
“தோனிக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை என்று அணி நிர்வாகம் ரசிகர்களுக்கு தவறான தகவல்களை கூறக்கூடாது. கண்டிப்பாக தோனியிடம் சில அசௌகரியங்கள் தெரிந்தது. விக்கெட்டுகளுக்கு நடுவே மின்னல் வேகத்தில் ஓடக்கூடிய அவர் ராஜஸ்தான் போட்டியில் பழைய தோனி போல இல்லை. கீப்பிங் செய்து கொண்டிருந்த அவர் இன்னிங்ஸ் கடைசி கட்டத்தை நெருங்கும்போது காலில் சற்று தட்டுத்தடுமாறி நடந்ததை பார்க்க முடிந்தது. இதில் ஏதோ இருக்கின்றது. ஆனால் அணி நிர்வாகம் தவறான தகவல்களை கூறிவருகிறது என்பதால், தோனி மற்றும் அணியின் மருத்துவர்கள் வெளிப்படையாக பேச வேண்டும். இன்னும் பல போட்டிகள் தோனி விளையாட வேண்டும்.” என பேசினார்.