ஒரே நாளில் இந்திய அணிக்கு அடித்த இரண்டு ஜாக்பாட்… தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி இந்திய அணியின் வேலையை ஈசியாக்கியது ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் சர்வதேச டெஸ்ட் சாம்பியன்சிப் தொடருக்கான புள்ளி பட்டியலில் தென் ஆப்ரிக்கா அணி மூன்றாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.
தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டி ஆஸ்திரேலியாவின் கப்பா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததை தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸில் வெறும் 152 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக மிட்செல் ஸ்டார்க் மற்றும் நாதன் லயோன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதன்பின் முதல் இன்னிங்ஸை துவங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டர்வீஸ் ஹெட் 92 ரன்கள் எடுத்து கொடுத்தாலும், மற்ற வீரர்கள் தங்களது பங்களிப்பை சரியாக செய்யாததால் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 218 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதன்பின் 66 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய தென் ஆப்ரிக்கா அணி, முதல் இன்னிங்ஸை விட இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங்கில் மிக மோசமாக செயல்பட்டு வெறும் 99 ரன்களுக்கே தென் ஆப்ரிக்கா அணி ஆல் அவுட்டானது.
இதன்மூலம் வெறும் 34 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியும் முதல் நான்கு விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து தடுமாறினாலும், இலக்கு மிக மிக எளியது என்பதால் 7.5 ஓவரிலேயே இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றது.
தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலை பெற்றுள்ளது.
இந்தநிலையில், ஆஸ்திரேலிய அணியின் இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெறுவதற்கான இந்திய அணியின் வாய்ப்பு இலகுவாகியுள்ளது. வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் டெஸ்ட் சாம்பியன்சிப் தொடருக்கான புள்ளி பட்டியலில் இந்திய அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியிருந்த நிலையில், தற்போது தென் ஆப்ரிக்கா அணியின் தோல்வி மூலம் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த தென் ஆப்ரிக்கா அணி, புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளதால் இந்திய அணி மூன்றாவது இடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.