போன உலககோப்பையில் 10,000.. இந்த உலகக் கோப்பையில் 20,000.. கோலியின் சாதனை துளிகள்!!

கடந்த நான்கு வருடங்களில் (2015 -2019) மட்டுமே சர்வதேச போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்து விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கில் தனி மகுடம் தரித்து வலம் வருகிறார். நாளுக்கு நாள் இவர் தனது பேட்டிங் மூலம் முந்தைய சாதனையை திருத்தி எழுதிக் கொண்டிருக்கிறார். ஒருநாள் போட்டிகளில் அதிவேக பத்தாயிரம் ரன்கள், அதிவேக 11 ஆயிரம் ரன்கள், 40க்கும் மேற்பட்ட சதங்கள் என அடுக்கிக் கொண்டே போகலாம் இவரின் சாதனையை.

விராட் கோலியை இவ்வாறு கொண்டாட காரணம், இவர் இன்னும் 250 இன்னிங்ஸ்கள் கூட ஒரு நாள் போட்டிகளில் ஆட வில்லை. அதற்குள்ளாகவே இத்தனை பல சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார். வருங்காலத்தில் கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக திகழ்ந்த சச்சினின் சாதனையை எளிதில் தகர்ப்பார் எனவும் பரவலாக பேசப்படுகிறது.

தற்போது உலக கோப்பையில் விராத் கோலி ஒரு சதம் அடிக்கவில்லை என்றாலும் கூட தொடர்ந்து நான்கு போட்டிகளில் நான்கு அரை சதங்கள் அடித்து அணியை மிகச் சிறப்பான முறையில் வழிநடத்தி செல்கிறார்.  வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் அரை சதம் அடித்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அனைத்துப் போட்டிகளிலும் சேர்த்து அதிவேகமாக 20 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்பாக பிரையன் லாரா மற்றும் சச்சின் இருவரும் தலா 453 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். தற்போது இதை தகர்த்தெறிந்த விராட் கோலி வெறும் 417 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்.

கடந்த 4 வருடங்களில் விராத் கோலி…

RANCHI, INDIA – MARCH 08: Virat Kohli of India bats during game three of the One Day International series between India and Australia at JSCA International Stadium Complex on March 08, 2019 in Ranchi, India. (Photo by Robert Cianflone/Getty Images)

2015ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் அயர்லாந்துக்கு எதிரான போட்டியின்போது விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 10 ஆயிரம் ரன்களை கடந்தார். சரியாக நான்கு வருடங்கள் கழித்து இந்த உலக கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 20 ஆயிரம் ரன்களை கடந்து அசத்தியுள்ளார்.

2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு தற்போது வரை விராத் கோலி: 

கடந்த 4 வருடங்களில் 43 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள விராட் கோலி 4053 ரன்கள் அடித்துள்ளார். இதில் இவரது சராசரி 60.47 ஆகும். இதில் 15 சதங்கள் அடங்கும்.

71 ஒருநாள் போட்டிகளில் 4673 ரன்கள் அடித்துள்ளார். இதில் 19 சதங்கள் அடங்கும். இவரது சராசரி 80.22 ஆகும்.

39 டி20 போட்டிகளில் 1291 ரன்கள் அடித்துள்ளார். இவரது சராசரி 53.79 ஆகும்.

Prabhu Soundar:

This website uses cookies.