ஆர்சிபி அணி லக்னோ அணிக்கு எதிராக தோல்வியை தழுவியதற்கு மிக முக்கிய காரணம் விராட் கோலி-இன் பேட்டிங் தான் என்று கடுமையாக சாடி உள்ளார் முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டவுல்.
பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட்டிங் செய்து 212 ரன்கள் குவித்தது ஆர்சிபி அணி. அதிகபட்சமாக டூ ப்ளசிஸ் 79* ரன்கள், விராட் கோலி 61 ரன்கள், மேக்ஸ்வெல் 59 ரன்கள் அடித்தனர்.
பெங்களூருவை அதன் சொந்த மைதானத்தில் வீழ்த்துவது கடினம், அது மட்டுமல்லாது 213 ரன்கள் இலக்கு என்பது இன்னும் கடினம் எனினும் நம்பிக்கையுடன் களமிறங்கிய லக்னோ அணிக்கு ஸ்டாய்னிஸ்(65) மற்றும் நிக்கோலஸ் பூரன்(62) இருவரும் மின்னல் வேகத்தில் ரன்குவித்து இலக்கை நெருங்க உதவினர். பரபரப்பாக முடிந்த கடைசி ஓவர் கடைசி பந்தில் லக்னோ வெற்றி பெற்றது.
போட்டியில் விராட் கோலி வழக்கத்திற்கு மாறாக அதிரடியாக துவங்கி 25 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்தார். எட்டு ரன்கள் அடித்து அரைசதம் பூர்த்தி செய்வதற்கு 10 பந்துகளை எடுத்துக் கொண்டார். கடைசியாக 44 பந்துகளில் 61 ரன்கள் அடித்து ஆட்டமும் இழந்தார்.
விராட் கோலியின் இந்த இன்னிங்க்ஸை இரண்டாகப் பிரிக்கலாம். முதல் 25 பந்துகளில் 42 ரன்கள். அடுத்த 19 பந்துகளில் 19 ரன்கள். இரண்டாம் பாதியில் மிகவும் ஸ்லோவாக விளையாடியது ஆர்சிபி-க்கு தோல்வியை பெற்றுத்தந்துள்ளது என நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர சைமன் டவுல் சாடியுள்ளார்.
மேலும் விராட் கோலிக்கு ரெக்கார்டு தான் முக்கியம். அணி இரண்டாம் பட்சம் தான் என்றும் கடுமையாக சாடியுள்ளார். அவர் கூறியதாவது:
“அதிரடியாக துவங்கிய விராட் கோலி 42 ரன்கள் எட்டிய பிறகு, எட்டு ரன்கள் அடிப்பதற்கு பத்து பந்துகளை எடுத்துக் கொண்டார். விராட் கோலி அடித்து விளையாடுகிறார் என்கிற காரணத்திற்காக மறுமுனையில் டு பிளசிஸ் நிதானமாக விளையாடினார். பிறகு விராட் கோலியும் ஸ்லோவாக ஆடியதால், அணியின் ஸ்கோர் மிகவும் ஸ்லோவாக உயர்ந்து கொண்டிருந்தது.
அடித்துக் கொண்டிருந்த வேகத்தை டி20 போட்டிகளில் நிறுத்தவே கூடாது. தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். டி20 போட்டிகளில் சொந்த ரெக்கார்டுகளுக்கு இடமில்லை. கடைசிவரை அடித்துக் கொடுக்க வேண்டும். குறிப்பாக விராட் கோலி ஆட்டமிழந்தாலும் அதன் பின்னர் நிறைய வீரர்கள் இருக்கின்றனர். ஆனால் இதை யோசிக்காமல் ஸ்லோவாக விளையாடினார். இது சொந்த ரெக்கார்டுக்காக என்று தெளிவாகவே தெரிகிறது.” என சாடினார்.