உலகக் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து அணி இவ்வளவு மோசமாக ஆடுவது மிகவும் அதிர்ச்சி தரும் ஒன்றாக இருக்கிறது என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.
உலக கோப்பை தொடர் துவங்குவதற்கு முன்பாக இந்தியா, இங்கிலாந்து இரு அணிகளும் இந்த உலக கோப்பையில் ஆளுமை படைக்கும் அணிகளாக இருக்கும். அதேநேரம் இவர்களில் ஒரு அணி தான் உலக கோப்பையை வெல்லப் போகிறார்கள் என்ற கணிப்பும் நிலவி வந்தது.
தற்போதைய இந்திய அணி தனது ஆதிக்கத்தை மிகச் சிறப்பாக செலுத்தி வருகிறது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சற்று தடுமாற்றம் கொண்ட வெற்றியை பெற்றது இதைத் தவிர மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் ஓங்கியிருந்தது. இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா அரையிறுதிக்குள் நுழைந்து விடும்.
மறுபக்கம் இங்கிலாந்து அணி எளிதில் அரையிறுதிக்குள் நுழைந்து விடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சொந்த மைதானத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 64 ரன்கள் வித்தியாசத்திலும், இலங்கை அணியிடம் 232 ரன்கள் என்ற எளிய இலக்கை எட்டமுடியாமல் தோல்வியை தழுவியது. இதற்க்கு முன்பாக பாகிஸ்தான் அணியிடமும் தோல்வியை தழுவி, தற்போது அரையிறுதி வாய்ப்பே இழுபரியில் இருக்கிறது இங்கிலாந்து அணிக்கு.
இங்கிலாந்து அணியுடனான போட்டிக்காக பயிற்சியில் ஈடுபட்டிருந்த விராத் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், இங்கிலாந்து அதன் சொந்த மண்ணில் கடந்த சில வருடங்களாக ஆதிக்கம் செலுத்தி வருவதை நாம் கண்டிருப்போம். தற்போது மிகப்பெரிய தொடரான உலகக்கோப்பையில் இப்படி தடுமாறி வருவது எனக்கு மிகவும் ஆச்சரியமளிக்கிறது.
நான் முன்னமே சொன்னது போல், அழுத்தத்தை எந்த அணி சரியாக கையாள்கிறதோ அதுவே அன்றைய போட்டியில் வெற்றி பெறுவதற்கு தகுதியான அணியாக இருக்கும். இங்கிலாந்து அதனை செய்ய தவறி வருகிறது என நினைக்கிறேன். இருப்பினும் இந்தியாவுடன் ஆடுகையில் அவர்களை எளிதாக எடுத்துக்கொள்ள இயலாது என்றார்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி வென்றுவிட்டதால், இந்தியாவுடனான போட்டி இங்கிலாந்துக்கு மிக முக்கியமான ஒன்றாக இருக்கும்.