2021ம் ஆண்டு நடைபெற இருக்கும் 14வது ஐபிஎல் சீசன் ஏப்ரல்/மே மாதம் நடத்துவதற்கு பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. எனவே இந்த 14வது ஐபிஎல் சீசனுக்காக அனைத்து அணிகளும் தற்போது தீவிரமாக தயாராகி வருகின்றனர். ஐபிஎல் போட்டி நடைபெறும் தேதி மற்றும் இடம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. பிசிசிஐ தலைவர் கங்குலி இதற்கான முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்த ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம் கடந்த பிப்ரவரி மாதம் 18ம் தேதி நடைபெற்றது.இந்த மினி ஏலத்தில் கிறிஸ் மோரிஸ் -16.25 கோடி, கைல் ஜாமிசன் – 15 கோடி, மேஸ்வெல் – 15 கோடி, ஜெய் ரிச்சர்ட்ஸன் – 14 கோடி, கிருஷ்ணப்ப கவுதம் – 9.25 கோடி, மெரிடித் – 8 கோடி ஆகியோர் அதிக விலைக்கு எடுக்கப்பட்டார்கள். இந்நிலையில், கடந்த சீசனில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேதர் ஜாதவ் சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

எனவே இந்தாண்டு இவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்காது என்று பேசிக்கொண்டு இருந்தபோது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேதர் ஜாதவை 2 கோடிக்கு எடுத்துள்ளனர். கேதர் ஜாதவ் தொடர்ச்சியாக மோசமாக விளையாடியதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தெளிவாக அவரை வெளியேற்றினர். ஆனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அவரைத் தேர்வு செய்து தவறு செய்துவிட்டதாகக் கூறி வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து ஐதராபாத் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விவிஎஸ் லட்சுமணன் விளக்கமளித்திருக்கிறார்.

“ ஐதராபாத் அணியில் மிடில் ஆர்டரில் ஸ்டாண்டிங் செய்யும் வீரர்கள் என்று யாரும் இல்லை. தொடக்க வீரர்களாக வார்னர், பேர்ஸ்டோ, வில்லியம்சன் போன்ற வீரர்கள் இருந்தாலும் மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடக் கூடிய வீரர்கள் யாரும் இல்லை. ஜாதவ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடி இருக்கிறார். எனவே தான் இவரை நாங்கள் எங்களது அணியில் தேர்வு செய்தோம். இவர் எங்களது அணியில் மிடில் ஆர்டர் பிரச்சனையை தீர்த்து வைப்பார் என்று நம்புகிறோம்” என்று விவிஎஸ் லட்சுமணன் கூறியிருக்கிறார்.
