குஜராத் டைட்டன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி மிகவும் ஆபத்தான ஒரு பந்து வீச்சாளர் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைப் தெரிவித்துள்ளார்.
15வது ஐபிஎல் தொடரின் 16வது போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், மாயன்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.
மும்பை Brabourne மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக லிவிங்ஸ்டன் 64 ரன்களும், ஷிகர் தவான் 35 ரன்களும் எடுத்தனர்.
இதன்பின் 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை துரத்தி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சுப்மன் கில் 96 ரன்கள் எடுத்து கொடுத்தாலும், மற்றவர்கள் அதிரடியாக விளையாட தவறியதால், குஜராத் அணியின் வெற்றிக்கு கடைசி ஒரு ஓவரில் 19 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டது.
போட்டியின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் கடைசி ஓவரில் களத்தில் இருந்த குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதல் பந்திலேயே ரன் அவுட்டாகி வெளியேறினார். இதன்பின் களத்திற்கு வந்த ராகுல் திவாடியா இரண்டாவது பந்தில் ஒரு ரன் அடித்தார், மூன்றாவது பந்தில் பவுண்டரி அடித்த டேவிட் மில்லர் தேவையே இல்லாமல் நான்காவது பந்தில் 1 ரன் எடுத்ததால், கடைசி இரண்டு பந்தில் 12 ரன்கள் தேவை என்ற நிலை குஜராத் அணிக்கு ஏற்பட்டது. கடைசி இரண்டு பந்துகளை எதிர்கொண்ட ராகுல் திவாட்டியா அசால்டாக இரண்டு மிரட்டல் சிக்ஸர்கள் பறக்கவிட்டதன் மூலம், குஜராத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

இந்தநிலையில், இந்த போட்டியின் வெற்றியின் மூலம் நடப்பு தொடரில் தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி, இதன் மூலம் நடப்பு தொடருக்கான புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
ஆபத்தான பந்துவீ்சாளர்….
2022 ஐபிஎல் தொடரில் அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணி தன்னுடைய முதல் தொடரிலேயே மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது, தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற்ற குஜராத் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் அந்த அணியில் இடம் பெற்றிருக்கும் பந்துவீச்சாளர்கள் தான் என்றும் பலரும் பாராட்டி வருகின்றனர்.
அந்த வகையில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைப் பாராட்டிப் பேசியுள்ளார்.

ஷமி குறித்து முகமது கைப் பேசுகையில்,“இளம் வீரர்கள் அனைவரும் முகமது ஷமியை பார்த்து, முகமது ஷமி எப்படி மூன்று விதமான தொடரிலும் ஒரே மாதிரி சிறப்பாக பந்து வீசுகிறார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும், முகமது ஷமி மிகச் சிறந்த ஒரு வேகப்பந்து வீச்சாளர், அவருடைய சீம் பொசிஷன் மற்றும் பந்து பிடித்திருக்கும் முறை மிகவும் அற்புதமாக உள்ளது,அவர் பந்துவீசும் போது சீம் தரையில் பட்டு பந்து நகர்கிறது, அதுதான் முகமது ஷமியின் மிகப்பெரும் பலம், நியூ பாலில் பந்துவீச முகமது ஷமியை விட பயங்கிரமான பந்து வீச்சாளர்கள் இந்த உலகில் யாருமே கிடையாது என்று முகமது கைப் ஷமியை பாராட்டி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.