Football, ISL, ISL 2017 Fixtures, ISL 2017 Schedules
புனே:

10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் புனேயில் இன்று இரவு 8 மணிக்கு அரங்கேறும் 5-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.புனே சிட்டி-டெல்லி டைனமோஸ் எப்.சி. அணிகள் மோதுகின்றன. முதல் மூன்று சீசனில் லீக் சுற்றை கூட தாண்டாத புனே அணி இந்த முறை அதற்கு பரிகாரம் தேடும் முனைப்புடன் உள்ளது.

சொந்த மண்ணில் முதல் ஆட்டத்தில் விளையாடும் புனே அணி வெற்றியுடன் தொடங்குவதில் தீவிரம் காட்டும். இதே போல் டெல்லி அணியும் வெற்றிகரமாக போட்டியை தொடங்கும் ஆர்வத்தில் இருக்கிறது. எனவே ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

புனே அணியின் தலைமை பயிற்சியாளர் ராங்கோ போபோவிச் (செர்பியா) அளித்த பேட்டியில், ‘எங்களது முதல் போட்டியை எதிர்கொள்ள உற்சாகமாக இருக்கிறேன். போட்டிக்கு தயாராக எங்களுக்கு போதிய நேரம் கிடைத்தது. வீரர்களும் மிகுந்த உத்வேகத்துடன் உள்ளனர். நாங்கள் என்ன செய்ய விரும்புகிறோமோ? அதனை செய்து முடிக்கும் திறமை எங்களிடம் இருப்பதாக நம்புகிறேன். உள்ளூரில் விளையாடுவதை சாதகம் என்று நான் நினைக்கவில்லை. வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தால் உள்ளூரிலும், வெளியூரிலும் சிறப்பாக விளையாட வேண்டியது அவசியமானதாகும்’ என்றார்.

டெல்லி அணியின் பயிற்சியாளர் மிக்யூல் ஏஞ்சல் போர்டுகல் (ஸ்பெயின்) கூறுகையில், ‘நல்ல தொடக்கம் காண வேண்டியது முக்கியமானதாகும். முதல் ஆட்டம் அணியின் திறமையை பரிசோதிப்பதாகும். இந்ததொடரில் வெற்றி வாய்ப்பு எல்லோருக்கு சரிசமமாக இருக்கிறது. எந்த அணியும் வெற்றி பெறலாம்’ என்றார்.

புனே-டெல்லி அணிகள் இதுவரை 6 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் புனே அணி ஒரு முறையும், டெல்லி அணி 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *