எல்லாமே இவர் கையில் தான் உள்ளது… இந்திய அணிக்கு சாம்பியன் பட்டம் வென்று கொடுக்க போவது இவர் தான்; இயன் மோர்கன் கணிப்பு
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஹர்திக் பாண்டியாவின் பங்களிப்பு இந்திய அணிக்கு மிக முக்கியமானதாக இருக்கும் என முன்னாள் இங்கிலாந்து வீரரான இயன் மோர்கன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5ம் தேதி முதல் நவம்பர் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்த முறை இந்தியாவில் நடைபெற உள்ளது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பயிற்சி போட்டிகள் செப்டம்பர் 30ம் தேதியில் இருந்து நடைபெற உள்ளது.
கடந்த 2011ம் ஆண்டிற்கு பிறகு மீண்டும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற இருப்பதால், இந்திய அணி இந்த முறையாவது சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்கள் மத்தியில் அதிகமாக நிலவி வருகிறது. இதனால் முன்னாள் இந்திய வீரர்கள் பலர் இந்திய அணிக்கு தேவையான தங்களது ஆலோசனைகளை தொடர்ந்து வருகின்றனர். அதே போல் எதிர்வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்தான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் ஓபனாக பகிர்ந்து வருகின்றனர்.
அந்தவகையில், எதிர்வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து பேசியுள்ள முன்னாள் இங்கிலாந்து வீரரான இயன் மோர்கன், உலகக்கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியாவின் பங்களிப்பு இந்திய அணிக்கு மிக முக்கியமானதாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து இயன் மோர்கன் பேசுகையில், “ஹர்திக் பாண்டியாவின் தற்போதைய பிட்னெஸ் வியக்க வைக்கிறது. அவரால் பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட முடிவது இந்திய அணிக்கு கூடுதல் வலு சேர்க்கும். ஆசிய கோப்பை தொடரில் அவர் குறைந்த ஓவர்களை வீசினாலும் அதை மிக சரியாக செய்கிறார். பேட்டிங்கில் முதல் 6 இடங்களில் களமிறங்கும் ஒருவர் பந்துவீசவும் செய்தால் அது அந்த அணிகளுக்கு அதிக பலத்தை சேர்க்கும். இங்கிலாந்து அணிக்கு பென் ஸ்டோக்ஸ், ஆஸ்திரேலிய அணியில் ஸ்டோய்னிஸ், கேமிரான் க்ரீன் போன்ற வீரர்கள் அந்த அந்த அணிகளுக்கு பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டிலும் வலு சேர்க்கின்றனர், அதே போல் தான் ஹர்திக் பாண்டியாவும். ஹர்திக் பாண்டியா பேட்டிங்கோடு சேர்த்து பந்துவீச்சில் குறைந்தது 5 அல்லது 6 ஓவர்கள் வீசினால் போதும், அது இந்திய அணிக்கு உலகக்கோப்பை தொடரில் பெரிய பலமாக இருக்கும். உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவின் பங்களிப்பு இந்திய அணிக்கு மிக முக்கியமானது” என்று தெரிவித்தார்.