இதெல்லாம் ஒரு தேர்வு முறையா; ஒவ்வொரு வீரருக்கும் தனித்தனி அளவுகோலா? கருண் நாயருக்காக வரிந்து கட்டும் ஹர்பஜன் சிங் 1

இந்திய அணியைத் தேர்வு செய்யும், எம்எஸ்கே பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழுவினர் வீரர்களைத் தேர்வு செய்யும் விதத்தைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கிறது, ஒவ்வொரு வீரருக்கும் தனித்தனி அளவுகோல் வைக்கிறார்கள் என்று ஹர்பஜன் சிங் வேதனை தெரிவித்துள்ளார்.

அதிலும் ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டி, இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளில் அணிக்குத் தேர்வு செய்யப்பட்டும் வாய்ப்பு வழங்கப்படாமல் பெஞ்சில் அமரவைக்கப்பட்ட கருண் நாயர், மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்படவில்லை. இதனால், கருண் நாயருக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. சேவாக் ஆதரவு தெரிவித்த நிலையில், இப்போது ஹர்பஜனும் கருண் நாயருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதெல்லாம் ஒரு தேர்வு முறையா; ஒவ்வொரு வீரருக்கும் தனித்தனி அளவுகோலா? கருண் நாயருக்காக வரிந்து கட்டும் ஹர்பஜன் சிங் 2

இது குறித்து மூத்த வீரர் ஹர்பஜன் சிங் பிடிஐ நிருபரிடம் இந்திய அணியின் தேர்வுக்குழு குறித்து கடுமையாகச் சாடினார்.

அவர் கூறியதாவது:

”ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டி, இங்கிலாந்து டெஸ்ட் போட்டி என இரண்டுக்கும் அணிக்குத் தேர்வு செய்யப்பட்டவர் கருண் நாயர். ஆனால், அவருக்கு ஒரு வாய்ப்பு கூட வழங்கப்படாமல், தொடர்ந்து பெஞ்சில் அமர வைக்கப்பட்டார். மேற்கிந்தியத்தீவுகள் தொடருக்கு அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

எந்த அடிப்படையில் எம்.எஸ்.கே பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழு வீரர்களை அணிக்குத் தேர்வு செய்கிறார்கள். இந்தக் குழப்பம் களையப்பட வேண்டியது அவசியம். அணிக்கு ஒரு வீரரைத் தேர்வு செய்து அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படாமல் 3 மாதம் அமரவைத்து பின்னர் அவர் சரியில்லை என நீக்குவது எந்த அடிப்படையில் சரியாகும். வாய்ப்பு கொடுத்து அவர் விளையாடுவது சரியில்லை என்றால் நீக்கலாம். எந்த வாய்ப்பும் கொடுக்காமல் கருண் நாயரை நீக்குவது சரியா?

இதெல்லாம் ஒரு தேர்வு முறையா; ஒவ்வொரு வீரருக்கும் தனித்தனி அளவுகோலா? கருண் நாயருக்காக வரிந்து கட்டும் ஹர்பஜன் சிங் 3

என்னை நம்புங்கள். இந்த தேர்வுக்குழுவினர் செய்யும் செயலைப் பார்த்து மிகுந்த வேதனையில் இருக்கிறேன். வீரர்களைத் தேர்வு செய்ய எந்தவிதமான அளவு கோல் வைத்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதே கடினமாக இருக்கிறது.

அணிக்கு வீரர்களைத் தேர்வு செய்வதென்றால், ஒரேமாதிரியான விதிமுறைகள் கடைப்பிடிக்கப் பட வேண்டும். ஆனால், ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொருவிதமான அளவுகோல் பயன்படுத்தப்படுவதாக நான் அறிகிறேன். சிலருக்கு அவர்களின் திறமையை நிரூபிக்கப் பல வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. சிலருக்கு ஒரே வாய்ப்பில் அவரின் வாய்ப்புகள் பறிக்கப்பட்டு நீக்கப்படுகிறார்கள்.

நான் ஒரு கேள்வி கேட்கிறேன், பதில் சொல்லுங்கள். மேற்கிந்தியத்தீவுகள் டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஹனுமா விஹாரி சரியாக விளையாடாவிட்டால், என்ன நடக்கும். ஒரு வீரர் மோசமாக விளையாட வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. விஹாரி சிறப்பாக விளையாட வேண்டும். நான் யூகத்தில்தான் இந்தக் கேள்வியைக் கேட்கிறேன்.

அவ்வாறு விஹாரி விளையாடாவிட்டால், விஹாரியை நீக்கிவிட்டு, நாயரை மீண்டும் எடுப்பீர்களா. ஆஸ்திரேலியத் தொடருக்கு அவர் நம்பிக்கையுடன் இருப்பார் என்று நினைக்கிறீர்களா?

ஒரு வீரருக்கு சில போட்டிகளில் வாய்ப்பு கொடுத்து அவரின் திறமையை முடிவு செய்ய இயலாது. என்னுடைய கேள்வியெல்லாம், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கருண் நாயர் இடம் பெற கேப்டன் விராட் கோலியைத் தேர்வுக்குழுவினர் சமாதானம் செய்தார்களா அல்லது அவரின் விருப்பம் இல்லாமல் தேர்வு செய்தார்களா?

இதெல்லாம் ஒரு தேர்வு முறையா; ஒவ்வொரு வீரருக்கும் தனித்தனி அளவுகோலா? கருண் நாயருக்காக வரிந்து கட்டும் ஹர்பஜன் சிங் 4

கருண் நாயர்

மிக மோசமான தேர்வுக்குழு கொள்கையால், அணியின் தார்மீக நம்பிக்கையும், செயல்பாடும் பாதிக்கப்படும் உருவாகியுள்ளது. ஆஸ்திரேலியத் தொடருக்கு முன்பாக அனைத்தும் சரிசெய்யப்பட்டால் மகிழ்ச்சி”.

இவ்வாறு ஹர்பஜன் சிங் தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *