ப்ளே ஆப் சுற்று, புனே ,பாட்னா அணிகள் வெற்றி 1

புரோ கபடி லீக் ‘பிளே-ஆப்’ சுற்று ஆட்டங்களில் புனே, பாட்னா அணிகள் வெற்றி

மும்பை:

12 அணிகள் இடையிலான 5-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற 12 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் ஆட்டங்கள் முடிவில் ‘ஏ’ பிரிவில் முறையே முதல் 3 இடங்களை பிடித்த குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ், புனேரி பால்டன், அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறின. மும்பை, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், தபாங் டெல்லி அணிகள் வெளியேறின. ‘பி’ பிரிவில் முறையே முதல் 3 இடங்களை பிடித்த பெங்கால் வாரியர்ஸ், பாட்னா பைரட்ஸ், உத்தரபிரதேச யோத்தா அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் நுழைந்தன. பெங்களூரு புல்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ், தமிழ் தலைவாஸ் அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து நடையை கட்டின.

2 நாள் ஓய்வுக்கு பிறகு ‘பிளே-ஆப்’ சுற்று ஆட்டம் தொடங்கியது. மும்பையில் நேற்று இரவு நடந்த முதலாவது எலிமினேட்டர் சுற்று (வெளியேற்றுதல் சுற்று) ஆட்டத்தில் புனேரி பால்டன்-உத்தரபிரதேச யோத்தா அணிகள் மோதின.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் புனேரி பால்டன் அணி நெருக்கடியை நேர்த்தியாக சமாளித்து 40-38 என்ற புள்ளி கணக்கில் உத்தரபிரதேச யோத்தா அணியை வீழ்த்தியது. தோல்வி கண்ட உத்தரபிரதேச யோத்தா அணி இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்து வெளியேறியது.

2-வது எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ் அணி 69-30 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியை சாய்த்தது. பாட்னா பைரட்ஸ் அணி வீரர் பர்தீப் நர்வால் 34 புள்ளிகள் குவித்தார். அவர் ஒரு ரைடில் 6 வீரர்களை வீழ்த்தி எதிரணியை ஆல்-அவுட் செய்த விதம் ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருந்தது. தோல்வி கண்ட அரியானா அணி வெளியேறியது.

மும்பையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் முதலாவது குவாலிபையர் (தகுதி சுற்று) ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ்-பெங்கால் வாரியர்ஸ் (இரவு 8 மணி) அணிகள் மோதுகின்றன. 3-வது எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் புனேரி பால்டன்-பாட்னா பைரட்ஸ் (இரவு 9 மணி) அணிகள் சந்திக்கின்றன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *