அடுத்த 2 டெஸ்ட் போட்டிக்கு இவரை கேப்டனாக போடுங்க; முன்னாள் கேப்டன் பேட்டி!!

இங்கிலாந்து அணி நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரில் படுதோல்வியை சந்தித்துள்ளது. இதனால் புதிய கேப்டனாக பென் ஸ்டோக்ஸை போடுங்கள் என முன்னாள் கேப்டன் பேட்டி அளித்துள்ளார்.

5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி மூன்று போட்டிகளில் தோல்வியுற்று, தொடரை மீண்டுமொருமுறை ஆஸ்திரேலிய அணியிடம் இழந்திருக்கிறது. பிரிஸ்பேன் மற்றும் அடிலெய்டு போட்டிகளில் செய்த அதே தவறை, மெல்போர்ன் போட்டியிலும் செய்ததால் இங்கிலாந்து அணி தொடரை இழக்க நேரிட்டது. 

ஜோ ரூட் பேட்டிங்கில் சிறப்பாக பங்களிப்பை கொடுத்து வந்தாலும், கேப்டனாக நன்கு செயல்பட தவறியுள்ளார். இதனால் ஜாம்பவான்கள் பலர் ஜோ ரூட் மீது கடுமையான விமர்சனங்களை கூறியுள்ளனர். ஆஷஸ் தொடரில் அடைந்த தோல்வி மட்டுமே இந்த விமர்சனத்திற்கு காரணமல்ல, இந்தவருடம் 9 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து தோல்வியை அடைந்தது. 

ஜோ ரூட் இங்கிலாந்து அணிக்கு டெஸ்ட் போட்டிகளில்  அதிக வெற்றிகளை பெற்று, சிறந்த கேப்டனாக இருந்தாலும், இந்தாண்டு தொடர்ந்து தோல்விகளை பெறுவதால், இனி அவர் கேப்டன் பொறுப்பில் நீடிப்பதற்கு சரியாக இருக்காது என கூறப்படுகிறது.

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் ஆர்தர் தனது கருத்தில், பென் ஸ்டோக்ஸ் தான் இனி கேப்டனாக வர வேண்டும், ஜோ ரூட் விலக வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

“ஜோ ரூட்டிற்கு பேட்ஸ்மேனாக இந்த வருடம் மிகச் சிறப்பாக இருக்கிறது. ஆனால் கேப்டன் பொறுப்பில் இருந்துகொண்டு இங்கிலாந்து அணியை வழிநடத்திய விதம் மிகவும் மோசமாக இருந்தது. அவரது திட்டங்கள் எதிரணியால் எளிதாக முறியடிக்கப்பட்டு விட்டன. இதனால் அவர் வருத்தத்தில் இருக்கலாம்.  9 போட்டிகளில் இங்கிலாந்து அணி தோல்வியை சந்தித்தது. ஓரிரு தொடர்களில் தோல்விகள் என்றால் வாய்ப்புகள் கொடுக்கலாம். இத்தனை தோல்விகள் என்றால்,  அணியில் மாற்றங்களை கொண்டு வருவதே சரியான முடிவாக இருக்கும். ரூட் தனது கேப்டன் பதவியில் இருந்து விரைவாக ராஜினாமா செய்யவேண்டும்.

புதிய கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்க வேண்டும். அவரின் ஆக்ரோஷம் அணிக்கு பொருத்தமாக இருக்கும். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரூட் சிறிது நேரம் இல்லாதபோது பந்துவீச்சாளர்களை சரியாக பயன்படுத்தி, ஆஸ்திரேலியா அணியின் 4 விக்கெட்டுகளை குறுகிய நேரத்தில் கைப்பற்றினார். ரன்களையும் கட்டுப்படுத்தி இருந்தார். அடுத்து வரும் 2 டெஸ்ட் போட்டிகளில் அவரை கேப்டனாக நியமித்தால்,  அடுத்த தொடர்களுக்கு பரிசோதனை மாதிரி இருக்கும்.” என கூறினார்.

Mohamed:

This website uses cookies.